ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில் தாலிபன்கள் தங்களது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளனர்.
அதன்படி ஆப்கானிஸ்தானின் பிரதமராக தாலிபன்களின் தலைவரான முல்லா அசன் ஹகுந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பிரதமராக அவரது முதல் அறிக்கையில், ஷரியத் சட்டத்தின் படியே ஆப்கானிஸ்தானின் நிர்வாகமும் வாழ்க்கை முறையும் இருக்கும். இதுவரை இருந்த முறை ஷரியத் சட்டப்படி மாற்றியமைக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக முந்தைய ஆட்சியை போன்று மீண்டும் இருக்காது என தாலிபன்கள் கூறி வந்தாலும் அவர்களின் சொற்களுக்கும், செயற்பாடுகளுக்கும் முன்னுக்குப் பின் முரணாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், உயர் கல்வித்துறையின் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள ஷேக் மெல்பி நூரல்லா முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் குறித்து பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதில்., “முதுகலை, Phd போன்ற பட்டங்களுக்கெல்லாம் இப்போது மதிப்பில்லை. இப்போது அதிகாரத்தில் இருக்கும் முல்லாக்கள், தாலிபன்கள் பிஎச்டி, முதுகலை ஏன் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள்தான். ஆனால் அவர்கள்தான் நாட்டை ஆளப் போகிறார்கள்.” எனக் கூறியுள்ளார்.
ஆனால் நாட்டில் உள்ள பெண்களோ தாலிபன்களால் தங்களது படிப்புக்கு பங்கம் வந்துவிடுமோ என்று ஒவ்வொரு நாளும் பீதியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.