ஆப்கானிஸ்தானில் இனி பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என தாலிபன்கள் தெரிவித்துவிட்டு உண்மையில் நடப்பது என்னவோ வேறு மாதிரியாக இருக்கிறது.
அதன்படி, அண்மையில் பெண்கள் கல்வி கற்க தடையில்லை. இருப்பினும் ஷரிய சட்டத்தின் படியே பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வர வேண்டும் எனக் குறிப்பிட்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறது தாலிபன்கள் அமைப்பு.
இப்படி இருக்கையில், கோர் மாகாணத்தில் பெண் என்பதற்காக கர்ப்பிணி போலிஸாரை கடுமையாக தாக்கி அவரது கணவர் மற்றும் குழந்தையின் முன்னிலையிலேயே ஈவு இரக்கமின்றி தாலிபன்கள் சுட்டுக்கொன்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் வசம் சென்றதில் இருந்தே அந்நாட்டு மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் தங்களது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற பீதியில் ஆப்கனை விட்டு லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர்.
இப்படியான சூழலில் கர்ப்பிணி பெண் போலிஸை தாலிபன்கள் கொடூரமாக சுட்டுக்கொன்ற நிகழ்வு ஆப்கானியர்களை மிரள வைத்திருக்கிறது. இன்னும் முறைப்படி தங்கள் தலைமையிலான அரசை அமைக்காதபோதே இவ்வளவு அட்டூழியங்களை தாலிபன்கள் கையாள்வது மனித உரிமைக்கு எதிரானது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.