வங்கதேசத்தில் மிகவும் குள்ளமான பசு உயிரிழந்த அதே நாளில் தமிழ்நாட்டில் ஒரு குள்ளமான கன்று பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்கா அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில் ராணி என்ற பசு இருந்தது. இது 51 செ.மீ. உயரம், 66 செ.மீ. நீளம், 26 கிலோ எடை கொண்டது. 2 வயதான இதுதான் உலகிலேயே குள்ளமான பசுவாகும்.
கேரளாவைச் சேர்ந்த மாணிக்யம் என்ற பசுவை உலகின் குள்ளமான பசு என கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த 2014-ல் அங்கீகரித்தது. இதன் உயரம் 61 செ.மீ. இந்நிலையில், 51 செ.மீ. உயரமுள்ள ராணி பசுவுக்கு உலகின் குள்ளமான பசு என்ற அங்கீகாரத்தை கின்னஸ் உலக சாதனை அமைப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ராணி பசு நேற்று உடல்நலக் கோளாறால் பலியானது. வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான வாயு சேர்ந்ததால் ராணி பசு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் நலன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஜயனின் வளர்ப்புப் பசு நேற்று மூன்றாவது முறையாகக் கன்றை ஈன்றுள்ளது.
ஆனால் அந்தக் கன்று சராசரி அளவைக் காட்டிலும் தரையோடு தரையாக தவழ்ந்து செல்லும் வகையில், சுமார் ஒரு அடிக்கும் குறைவான உயரமே உள்ளது.
இதனால், தாயிடம் பால் குடிக்க முடியாமலும் நடக்க முடியாமலும் தவித்து வருகிறது கன்று. ஒரு அடிக்கும் குறைவான உயரம் கொண்ட கன்று, தாயிடம் பால் குடிக்க முடியாமல் அவதியுறும் நிகழ்வு பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் மிகவும் குள்ளமான பசு உயிரிழந்த அதே நாளில் தமிழ்நாட்டில் ஒரு குள்ளமான கன்று பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.