ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் அதிபர் பதவியை ராஜினாமா செய்த அஷ்ரப் கனி தஜிகிஸ்தானுக்கு பணம் நிரப்பட்ட கார்கள் மற்றும் ஹெலிகாப்டரோடு தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகளுக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்க படைகள் சொந்த நாட்டிற்கு திரும்புவதாக முடிவெடுத்து வெளியேறியத் தொடங்கின. இதனையடுத்து அங்கு அரசுக்கு எதிராக போராடி வந்த தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை வசப்படுத்திய தாலிபான்கள் நேற்று தலைநகர் காபுலை கைப்பற்றினர். இதன் காரணமாக அங்கு உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அதிபர் பதவியை அஷ்ரப் கனி ராஜினாமா செய்துவிட்டு தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஆப்கானிஸ்தானின் அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
தாலிபான்கள் வசம் அதிகாரம் வந்துவிட்டதால் ஆப்கானிஸ்தான் மக்களில் பலர் அச்சமடைந்து, தங்கள் உடமைகளுடன் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். ஆனால் காபூலில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
காபூல் விமான நிலையத்தில் இருந்த விமானங்களில் முண்டியடித்து கொண்டு மக்கள் ஏறினர். சி - 17 குளோப்மாஸ்டர் விமானத்தில் ஏராளமானோர் ஏறினர். 3 பேர் விமானத்தின் சக்கரம் மற்றும் இறக்கைகளில் ஏறி அமர்ந்து கொண்டனர். விமானம் நடுவானில் பறந்த போது கட்டுப்பாட்டை இழந்த மூன்று பேர் பல்லாயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலியாகினர்.
இந்நிலையில், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பணத்தால் நிரப்பப்பட்ட 4 கார்கள், ஒரு ஹெலிகாப்டருடன் தப்பிச் சென்றதாகவும், ஹெலிகாப்டரில் திணிக்கப்பட முடியாத மீதமிருந்த பணத்தை அப்படியே விட்டுச் சென்றதாகவும் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.