இந்தியாவில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ச்சியாக மக்கள் விரோத சட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மேலும் இஸ்லாமியர்கள், தலித்துகள் மீதான தாக்குதலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
குறிப்பாக, புதிய வேளாண் சட்டம், புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்கள் பதிவேடு என மக்களுக்கு விரோதமான சட்டங்களை ஒன்றிய பா.ஜ.க அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டங்களுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தபோதும், மோடி அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்து வருகிறது.
டெல்லி எல்லையில் வேளாண் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்திக் கடந்த ஒன்பது மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் ஒன்றிய அரசு மவுனம் காத்து வருகிறது.
மேலும் கொரோனா தொற்றை பா.ஜ.க அரசு முறையாகக் கையாளாததால் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் நெருக்கமானவர்களை இழக்க நேரிட்டது. மேலும் தொடர்ந்து கொரோனாவை தவறான நிர்வாகம் கொண்டே கையாண்டு வருகிறது. இப்படித் தொடர்ந்து மக்களுக்கு எதிரான அரசாக ஒன்றிய அரசு உருவெடுத்துள்ளது. இதனால் ஒன்றிய அரசுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், நாட்டின் 75வது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் "மோடியே பதவி விலகு" என்ற வாசகம் கொண்ட ராட்சத பாதாகை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் தொங்கவிட்டு இந்தியர்கள் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், இந்தியாவில் 75வது சுதந்திரதினம் விடியும்போதும், நாட்டின் மதச்சார்பற்ற அரசியலமைப்பு சிதைந்துள்ளது. வகுப்புவாதம் மற்றும் சாதி வன்முறைகள் தொடர்கிறது. கொரோனா தொற்று நெருக்கடியிலும் அரசியல் கைதிகள் சிறையில் வாடுகிறார்கள்.
இந்த அநீதிகளுக்கு எல்லாம் பிரதமர் மோடிதான் காரணமா உள்ளார். எனவே அவர் பதவி விலகவேண்டும் என கோரி இந்த போராட்டத்தை இன்று நாங்கள் முன்னெடுத்துள்ளோம்"என தெரிவித்துள்ளனர்.