உலகம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.4,400 கோடி அபராதம்... பிரான்ஸ் உத்தரவால் பரபரப்பு - நடந்தது என்ன?

கூகுள் நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாட்டின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4,400 கோடி அபராதம் விதித்துள்ளது.

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.4,400 கோடி அபராதம்... பிரான்ஸ் உத்தரவால் பரபரப்பு - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஊடக நிறுவனங்களின் செய்திகளை பயன்படுத்தியதில் கூகுள் நிறுவனம் விதிகளை கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி பிரான்ஸ் நாட்டின் சந்தைப் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4,400 கோடி அபராதம் விதித்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது தளத்தில் மற்ற செய்தி ஊடகங்களின் செய்திகளைப் பயன்படுத்தும்போது அந்த செய்தி நிறுவனங்களுக்கு உரிய பங்குத்தொகையை அளிப்பதில்லை எனச் சர்ச்சை எழுந்தது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏஎஃப்பி, ஏபிக், எஸ்இபிஎம் ஆகிய செய்தி நிறுவனங்கள் கூகுள் மீது புகார் தெரிவித்தன. அந்நிறுவனங்கள் தங்களின் செய்திகளை கூகுள் நிறுவனம் பயன்படுத்தும்போது "Neighbouring Rights" என்பதன் அடிப்படையில் உரிய பணப்பலன் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன.

ஆனால், கூகுள் நிறுவனம் இதை ஏற்க மறுத்தது. வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கும் கூகுள் நிறுவனம் ஒத்துழைக்காத நிலையில், சந்தைப் போட்டி விதிமுறைகளை கண்காணித்து வரும் அமைப்பிடம் புகார் அளிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் செய்தி நிறுவனங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்துக்கு 500 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது அந்நாட்டின் சந்தைப் போட்டிகளை கண்காணிக்கும் ஒழுங்குமுறை ஆணையம்.

மேலும், அபராதத் தொகையை எப்படிச் செலுத்தப் போகிறோம் என்பதைப் பற்றி கூகுள் நிறுவனம் இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்காவிட்டால் சுமார் 8 கோடி ரூபாய் கூடுதல் இழப்பீடாக செலுத்த வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூகுள் பிரான்ஸ் நிறுவனம், “இந்த முடிவு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. எங்களின் தளத்தின் செய்திகளை கையாள்வதற்கு நாங்கள் அளித்த முக்கியத்துவத்தை, அதன் பின்னணியில் உள்ள எங்களின் உழைப்பைப் பிரதிபலிப்பதாக இல்லை.

சில செய்தி நிறுவனங்களுடன் கிட்டத்தட்ட சமரசத்தை எட்டிவிட்டோம். எல்லாம் முடிந்து முறைப்படி ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழலில் இப்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மிக அதிக பயனாளர்களைக் கொண்ட, செல்வாக்கு மிகுந்த தேடுபொறி நிறுவனமான கூகுளுக்கு மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories