‘முரசொலி’ நாளேட்டின் (ஜூன் 15, 2021) இன்றைய தலையங்கம் வருமாறு :
ஜி-7 நாடுகளின் பார்வையில் சீனாவும் கொரோனாவும் முக்கிய கவனம்பெற்றுள்ளன. இதுவே இன்றைய உலக அரசியலாக உள்ளது! தொழில் வளர்ச்சியில் முன்னணி இடங்களைப் பெற்றிருக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகியநாடுகளைக் கொண்ட கூட்டமைப்புத் தான் ஜி7 ஆகும். உலகின் பெரிய பணக்கார நாடுகளின் கூட்டமைப்பு என்றும் இதனைச் சொல்வார்கள். இந்த நாடுகளின் 47ஆவது மாநாடு பிரிட்டன் கார்ன்வால் பகுதியில் ஜூன் 11 தொடங்கி மூன்று நாட்கள் நடந்துள்ளது. இந்த மாநாட்டில் உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பற்றிய பேச்சுகள் அதிகம் இருந்துள்ளது. அதேபோல் சீனாவைப் பற்றியும் அதிகம் பேசி இருக்கிறார்கள்.
மாநாட்டை நடத்திய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், “பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவுவதாக ஜி-7 மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உறுதிமொழி அளித்துள்ளார்கள். ஏழை நாடுகளுக்கு நேரடியாக தடுப்பூசிகளை வழங்குவதன் மூலமோ, எல்லா தரப்பினருக்கும் பாரபட்சமின்றி கொரோனா தடுப்பூசிகள் சென்று சேர்வதற்காக ஐ.நா. செயல்படுத்தி வரும் கோவாக்ஸ் திட்டத்தின் மூலமாகவோ இந்த உதவியை ஜி-7 உறுப்பு நாடுகள் செய்யவுள்ளன. இந்த முடிவின் ஒருபகுதியாக, பிரிட்டனும் 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலகின் மிக ஏழ்மையான நாடுகளுக்கு வழங்கி உதவும். ஜி-7 மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முடிவு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசிசெலுத்துவதற்கான நோக்கத்தை அடைவதற்கான மிக முக்கியமானநடவடிக்கையாகும்” என்று கூறியிருப்பதை வரவேற்க வேண்டும்.
உலகம் கொரோனா என்ற பெரும் அச்சத்தில் பீடிக்கப்பட்ட நிலையில் அதற்கான தடுப்புக் கேடயமாகச் சொல்லப்படும் தடுப்பூசியை அதிகவிலைக்கு விற்கின்றன பல நாடுகள். ஒன்றிய பா.ஜ.க. அரசே சிலநாட்களுக்கு முன்னால்தான் இலவச தடுப்பூசி என்ற நிலையை எடுத்தது. ஒன்றிய அரசுக்கு ஒரு விலை - மாநில அரசுக்கு கூடுதல் விலை என்பது சில நாட்களுக்கு முன்பு வரை இருந்தது. இரண்டு நிறுவனங்களைத் தவிர வேறு நிறுவனங்கள் உள்ளே நுழைய முடியாத நிலைமை இருந்தது. மற்ற நிறுவனங்களுக்கும் அனுமதி தரலாம் என்ற நிலையை சமீபத்தில்தான் ஒன்றிய அரசு எடுத்தது. இந்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு ஓராண்டு காலம் ஆகியிருக்கிறது. இரண்டாவது அலையைக் கடக்க வேண்டி இருக்கிறது. இந்தியாவிலேயே இப்படி என்றால் இதனினும் மோசமான ஏழை நாடுகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இத்தகைய சூழலில் தடுப்பூசியை பரவலாக்கி அதனை அனைவருக்கும் செலுத்தியாக வேண்டிய கடமை உலக நாடுகளுக்கு உள்ளது.
கொரோனா என்பது உள்நாட்டுப் பிரச்சினை அல்ல. அது உலகளாவிய பிரச்சினை. ஒரு நாட்டில் கொரோனாவை ஒழித்தால் போதாது. ஒருநாட்டில் கூட கொரோனா இல்லை என்ற சூழலை உருவாக்க வேண்டும். அதனை ஜி7 நாடுகள் உணர்ந்திருப்பதை உணர முடிகிறது.
அடுத்ததாக சீனப் பிரச்சினை. சர்வதேச அளவில் சீனாவின் வர்த்தக ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் திட்டத்துக்கு ஜி-7 அமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. “சீனாவின் கடுமையான போட்டியை சமாளிக்கும் வகையில், தங்களது நாடுகளைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்திக் கொள்வதற்காக அரசுகள் உதவவேண்டும்” என்று அதிபர் பைடன் வலியுறுத்தி இருக்கிறார். இந்த வகைப்பட்ட கோரிக்கையின் பின்னணியை உன்னிப்பாக ஆராயவேண்டும். பொத்தாம் பொதுவாக பார்த்துவிட முடியாது. உலகத்தை பொருளாதார ரீதியாக வசப்படுத்த சீனா பல்வேறு முயற்சிகளில் இறங்கி வருகிறது. இது மறைமுகமாக அல்ல, வெளிப்படையாகவே நடந்து வருகிறது. அதாவது வர்த்தக வழித்தடம் உருவாக்குவதாகச் சொல்லிக்கொண்டு ஒருவிதமான ஆதிக்க வழித்தடத்தை சீனா நிலை நிறுத்தி வருகிறது. தங்கள் நாடுகளில் சாலைகள், ரயில் வழித்தடங்கள், துறைமுகங்கள் உருவாக்க சீனா தாராளமாக நிதி உதவிகள் செய்கிறது. கடன் கிடைத்தால் போதும் என்ற சூழலில் இருக்கும் நாடுகள் சீனாவின் பேராதிக்க மனோபாவத்துக்கு அடி பணியும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இதற்கு புரியும் வகையில் உதாரணம் சொல்ல வேண்டுமானால் நமக்குப் பக்கத்தில் இருக்கும் இலங்கை. முழுக்க முழுக்க அந்த நாடு சீனாவின் காலனியாதிக்க நாடு போலவே ஆக்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவுக்கும் நல்லதல்ல. தமிழகத்துக்கும் நல்லதல்ல. இதுகுறித்து தொடர்ந்து எழுதிவரும் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், பல்வேறு அதிர்ச்சிமிகு தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார்.
1. ஹம்பந்தோட்டா மட்டுமல்லாமல் கொழும்பு துறைமுகத்திலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
2. கொழும்பில் சீனா சிட்டி என்று தனியாக ஒன்று உருவாகிக் கொண்டு வருகின்றது.
3. சீனாவின் போர்க் கப்பல்கள் இந்து மகா சமுத்திரத்தில் இருக்கின்றது.
4. இராமேஸ்வரம் அருகே நெடுந்தீவு, அனலைத்தீவு, நைனாத்தீவுகளின் மின்சார உற்பத்தி செய்ய இலங்கை சீனாவிற்கு அனுமதி அளித்துள்ளது.
5. குமரி முனையில் இருந்து கொழும்பு பக்கம் கிட்டத்தட்ட 290 கிலோமீட்டர் சீனா நெருங்கிவிட்டது.
6. இனிமேல் தெற்கே சீனாவின் ஆதிக்கம் கடல்வழியாக பிரச்சினைகள் எழலாம்.
7. மற்றொரு புறம் ஜப்பான், பிரான்சு, அமெரிக்கா- டிகோ கார்சியாஎனவும் இந்து மகா சமுத்திரத்தில் ஆதிக்கம் உள்ளன.
- இப்படி ஒரு சர்வதேச சுழலில் இலங்கை சிக்கி உள்ளது. இலங்கை சிக்கி உள்ளது என்றால் அது இலங்கையைப் பொறுத்தது மட்டுமல்ல; இந்தியாவுக்கும் ஆபத்தானது ஆகும். அதனை இந்தியா உணர்ந்ததாகத் தெரியவில்லை.