பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வார இறுதியில் பொதுமக்கள் கேள்விக்குப் பதிலளிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் ஒருவர் இம்ரான்கானிடம், நாட்டில் பாலியல் வன்முறைகளைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், குழந்தைகளின் மீதான குற்றங்களைத் தடுக்க அரசு என்ன செய்யப் போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த இம்ரான்கான், பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்கள் நடப்பதற்குப் பெண்கள் குறைவான ஆடைகள் அணிந்து உடல் அழகை வெளிக்காட்டுவதே காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இப்போதெல்லாம் சமூகத்தின் மோசமான தன்மை காரணமாக விவாகரத்து விகிதங்கள் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் இம்ரான்கானின் இத்தகைய கருத்துக்குப் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம், “இம்ரானின் கருத்து அரசாங்கத்தின் அறியாமையைக் காட்டுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம்சாட்டுவதாக உள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் முதல் ஆணவக் கொலைகள் வரை எப்படி நடக்கிறது என்று இம்ரான்கான் தெரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், இம்ரான்கானின் பாலியல் சர்ச்சை கருத்துக்கு உலகளாவிய மகளிர் உரிமை அமைப்புகள் எதிர்வினை ஆற்றியுள்ளது. இந்நிலையில், அவரது முன்னாள் மனைவிகளும் இம்ரான்கானின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குற்றங்களில் ஈடுபடும் ஆண்களே குற்றச்செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என பிரிட்டனில் வசிக்கும் அவரது முன்னாள் மனைவிகள் ஜெனிமா கான் மற்றும் ரேஹம் கான் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.