உலகின் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையான சூயஸ் கால்வாய், 193 கி.மீ. நீளமும், 24 மீ ஆழமும், 205 மீ அகலமும் கொண்டது. எகிப்து அரசு 2015-ம் ஆண்டு பெரிய கப்பல்கள் பயணிக்கும் வகையில் சூயஸ் கால்வாயை விரிவாக்கம் செய்தது.
இந்நிலையில் சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான கன்டெய்னர்களுடன் புறப்பட்ட ‘எவர் கிவன்’ என்ற எவர் க்ரீன் நிறுவனத்தின் வணிகக் கப்பல், மலேசியா வழியாக பயணித்து மார்ச் 23ஆம் தேதி இரவு சூயஸ் கால்வாயை வந்தடைந்தது.
எவர் கிவன் கப்பல் 400 மீட்டர் நீளமும், 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்று. இந்தக் கப்பல் நெதர்லாந்தின் துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்கு சென்றுகொண்டிருந்தது.
எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாய்க்கு வந்தபோது திடீரென்று வீசிய பலத்த காற்றால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, கப்பலின் முன்பக்கம் கால்வாயின் வடக்குப் பக்க சுவற்றில் மோதியது. கப்பலின் பின்பக்கம் மேற்கு திசையில் தள்ளப்பட்டு மற்றொரு பக்கச் சுவரில் மோதி நின்றது.
கால்வாயின் இரு பக்க கரைகளின் சுவர்களிலும் மோதியபடி நடுவில் சிக்கிக்கொண்ட இந்த கப்பலால், அந்தப் பாதையில் எந்தக் கப்பல் போக்குவரத்தும் நடைபெற முடியாதபடி தடுக்கப்பட்டது.
இதனால், ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும், ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் சூயஸ் கால்வாயின் நீர் வழித்தடம் முற்றிலுமாக முடக்கப்பட்டு, ஏராளமான சரக்கு கப்பல்கள் போக்குவரத்துக்கு வழியின்றி நின்றன.
உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 12% சூயஸ் கால்வாய் வழியாகவே நடைபெறுகிறது. எதிர்பாராவிதமாக ஏற்பட்ட இந்தப் போக்குவரத்து தடையால் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை 4% அதிகரித்துள்ளது.
சூயஸ் கால்வாய்க்கு நடுவில் சிக்கிய எவர் கிவன் கப்பலுக்கு வடக்கே 30 கப்பல்களும் தெற்கே 3 கப்பல்களும் முடங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல் தெரிவிக்கிறது. இந்த நீர்வழிப் பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதன் காரணமாக மணிக்கு 40 கோடி டாலா் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கப்பலை நகர்த்தி, நீர்வழிப் போக்குவரத்தை சரிசெய்வதற்கு சில வாரங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. கப்பலின் எடையை குறைப்பதற்காக கப்பலில் உள்ள எரிபொருளை குறைத்து சரக்குகளை அகற்ற வேண்டியிருக்கும் என்றும் இதற்கு நிறைய பொருட்செலவும், காலச் செலவும் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது