பூமியைத் தொடர்ந்து, செவ்வாய் கிரகத்தில் மனித உயிர்கள் வாழ்வது சாத்தியமா என்ற ஆராய்ச்சியில் அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த ஆண்டு ஜூலை மாதம் Perseverance விண்கலத்தை வெற்றி கரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களைப் பூமிக்குத் திரும்பி எடுத்து வரவும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த Perseverance விண்கலம் தனது 7 மாத பயணத்தை வெற்றி கரமாக முடித்துக் கொண்டு, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணிக்குச் செவ்வாய் கிரகத்தில் rover தரையிறங்கியது. Perseverance விண்கலத்தின் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியில், இந்தியாவைச் சேர்ந்த நாசா விஞ்ஞானியான டாக்டர் சுவாதி மோகனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இவரது தலைமையில்தான் rover செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.
யார் இந்த சுவாதி மோகன்?
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தவர் தான் சுவாதி மோகன். இவர் ஒரு வயதில் இருக்கம் போது அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளார். அங்குதான் தனது பள்ளிப் படிப்பைத் துவக்கியிருக்கிறார். அவருக்கு முதலில் குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என்று ஆவல்.
ஆனால், தனது ஒன்பதாவது வயதில், 'ஸ்டார் டிரெக்' டிவி நிகழ்ச்சியைப் பார்த்துள்ளார். அப்போது மருத்துவர் கனவு ஆசை கலைந்து, புதிய உலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் சுவாதி மோகனுக்குத் துளிர்விட்டிருக்கிறது. பின்னர் விண்வெளி ஆய்வில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து, டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2013ம் ஆண்டில், இருந்தே ‘பெர்சவரன்ஸ்’ விண்கலத்தின் திட்டப்பணியில் இருந்து வருகிறார். மேலும் இந்த விண்கலத்தின் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்துள்ளார். ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில், எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை இவர் தான் உருவாக்கியுள்ளார். மேலும், நாசாவின் சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயணத் திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், “நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் வழிநடத்து குழுவின் தலைவர் டாக்டர். சுவாதி மோகன் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தியாவிற்கும் உலகிற்கும் பெருமைமிகு தருணம்!
நாசா ஜே.பி.எல் மற்றும் அதன் அறிவியலாளர்கள் அறிவியலின் புதிய எல்லைகளைக் கடந்து, நமது அறிவின் பரப்பை விரிவாக்கம் செய்வதை கண்டு வியப்புக் கொள்கிறேன்.” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் சுவாமி மோகனுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.