பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய். இவர் சிறுவயதில் இருந்தே பெண்களின் கல்விக்காக தொடர்ச்சியாக போராடி வருபவர். இவரின் இந்த கல்விச் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தலிபான் தீவிரவாதிகள் 2012ம் ஆண்டு 15 வயதுச் சிறுமியாக இருந்தபோது மலாலாவை துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலில் அவர் கழுத்தில் குண்டடிபட்டுப் பல நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உயிர் தப்பினார். இதன் பிறகும் பெண்களின் கல்விக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பேசியும், விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகிறார்.
மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு 2014ம் ஆண்டு கிடைத்தது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் உலகிலேயே மிகவும் பிரபலமான பதின்பருவத்தினர் என்ற விருதையும் இவருக்கு ஐ.நா.சபை வழங்கி கவுரவித்துள்ளது. தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பிரிட்டன் அரசு அடைக்கலம் அளித்ததை அடுத்து மலாலா லண்டனில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், போலிஸாரிடமிருந்து தப்பித்து, தலைமறைவாக உள்ள தீவிரவாதி இஸானுல்லா இஹ்சன், மலாலாவை மிரட்டும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில்,"மலாலா மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டும், மலாலாவுடனும் அவரது தந்தையுடனும் தீர்க்கப்படாத பிரச்சனை ஒன்று நிலுவையில் இருக்கிறது. இந்த முறை நிச்சயமாக எங்களது குறி தப்பாது" என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மலாலா அவரது ட்விட்டர் பக்கத்தில், "இவர் தலிபான்களின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் இஹ்ஸானுல்லா இஹ்சன். நான் உட்பட பல அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்குக் காரணமானவர். இவர் எவ்வாறு சமூக வலைதளத்தில் மக்களை மிரட்ட முடியும்? அவர் எவ்வாறு சிறையிலிருந்து தப்பித்தார்" என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே தீவிரவாதி இஸானுல்லாவின் பக்கங்களை ட்விட்டர் நிறுவனம் முடக்கி உள்ளது. மேலும் மலாலாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட ட்விட்டர் பக்கம் போலியானது என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. தலிபான் தீவிரவாதி பகிரக்கமாக டிவிட்டரில் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவத்திற்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.