மேற்கு வங்க மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் ஜாகிர் உசேன். முர்ஷிதாபாத் அருகே நிமிதா ரயில் நிலையத்தில் நடந்து சென்ற அமைச்சர் ஜாகிர் உசேன் மீது குண்டு வீசப்பட்டது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பைக் ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களை பா.ஜ.க விலைக்கு வாங்கி வருகிறது. இந்நிலையில்தான் இந்தக் குண்டு வீச்சு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க தொழிற்துறை அமைச்சர் ஜாகீர் உசேன் முர்ஷிதாபாத்தில் உள்ள நிமிதா ரயில் நிலையத்திலிருந்து குடும்பத்தினருடன் ரயிலில் கொல்கத்தாவுக்கு நேற்று செல்ல முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் அமைச்சர் ஜாகீர் உசேன் உட்பட பலர் படுகாயமடைந்தனர். அமைச்சரின் கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அமைச்சர் உசேன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவர்களிடம் உசேனின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “அமைச்சர் ஜாகீர் உசேன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெரிய சதி அடங்கியுள்ளது. அவரை வேறு ஒரு கட்சியில் சேருமாறு சிலர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். அந்த நெருக்கடியின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ரயில் நிலையத்தில் தாக்குதல் நடந்திருக்கும்போது, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த தங்கள் பொறுப்பை ரயில்வே எவ்வாறு மறுக்க முடியும்? அமைச்சர் உசேன் மீது தாக்குதல் நடத்துவது என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான வழக்கை மாநில சி.ஐ.டி பிரிவு விசாரணை நடத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.