சிரியா நாட்டின் அலெப்பே பிரதேசத்தில் அமைந்துள்ளது அல் பாப் நகரம். இந்த நகரத்தில் வசித்து வரும் சுமையா என்ற நான்கு வயது சிறுமி, தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டின் அருகே குடிநீருக்காகத் தோண்டப்பட்டிருந்த சிறிய ஆள்துளை கிணற்றுக்குள் தவறுதலாக குழந்தை விழுந்துள்ளது. பிறகு இருளை கண்டு பயமடைந்த சிறுமி “அம்மா.... அம்மா..” என கதறியுள்ளது.
இதையடுத்து, குழந்தையின் சத்தம் கேட்டு சுமையாவின் தாய் விட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது சுமையா கிணற்றில் விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து சுமையாவை மீட்க முயற்சித்தனர். ஆனால் இவர்களால் சிறுமியை மீட்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து, white helmets என்ற பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் விரைந்து வந்த பாதுகாப்புப் படை வீரர்கள், ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிறுமி சுமையா மீட்டனர்.
பின்னர், கிணற்றிலிருந்து வெளியே வந்த சுமையா, தனது தாயைப் பார்த்து "அம்மா எனது பொம்மை ஏங்கே?" என கேட்டது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. மேலும் குழந்தையைப் பத்திரமா மீட்ட பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அந்நகரமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர். கிணற்றிலிருந்து குழந்தை மீட்கப்பட்ட வீடியோவையும் white helmets என்ற பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது.