ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், வார்டு கவுன்சிலராகவும் இருந்தார். இந்நிலையில், நேற்று இரவு இவர் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, உடன் மது அருந்திய சின்னா என்ற நண்பர், தனது வீட்டில் நடைபெறவுள்ள பிறந்தநாள் விழாவிற்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கு, ரமேஷ் தான் வரமுடியாது என நண்பரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னா, காரை வேகமாக ஓட்டி வந்து ரமேஷின் மீது ஏற்றினார். அப்போது உடனிருந்த நண்பர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் சின்னா, தொடர்ச்சியாக மூன்று முறை ரமேஷ் மீது கார் ஏற்றினார். பிறகு அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இது குறித்து உடனிருந்த நண்பர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவல் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரமேஷ் உடலை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சின்னாவை போலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.