சீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019 ம் ஆண்டு முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பிறகு உலக நாடுகள் முழுவதும் பரவத்தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. பிறகு அந்தந்த நாடுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கையில் இறங்கின.
இந்நிலையில், தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உலகம் சற்றே இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இதனிடையே உருமாறிய கொரோனாவின் பரவல் பல நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சீனாவின் நுண்ணுயிரி ஆய்வகத்தில் இருந்துதான் வைரஸ் வரவியதாகவும், அங்கு உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்த வேண்டும் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இந்தியாவில் பா.ஜ.க தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்த அனுமதி அளிக்காமல், சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, டொனால்டு டிரம்ப் உலக சுகாதார அமைப்பிற்குக் கொடுத்து வந்த நிதியுதவியை நிறுத்தினார். இந்தியாவில், கூட பா.ஜ.க தலைவர்கள், சீனாதான் கொரோனா வைரஸை பரப்பியது என குற்றம்சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் 10 பேர் அடங்கிய விஞ்ஞானிகள் குழு சீனாவுக்குச் சென்று வூஹான் நகரில் ஆய்வு செய்தனர். பின்னர், இந்த ஆய்வு குறித்து உலக சுகாதார அமைப்புக்குழு வெளியிட்டுள்ள தகவலில், “சீனாவின் வுஹான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக கொரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. டிசம்பர் மாதத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. வுஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியதற்குச் சாத்தியமில்லை” என்று தெரிவித்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என்றும் இது சீன வைரஸ்தான் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், வுஹான் பகுதியில் கொரோனா வைரஸ் இருந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழு தெரிவித்திருக்கிறது. மேலும், பலத்த குற்றச்சாட்டுகளுக்கு இடையே வுஹானின் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.