சீனாவின் வூஹான் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை வீட்டிலேயே பல மாதங்கள் முடக்கியது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவில் பிடியிலிருந்து உலகம் மீண்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதேநேரத்தில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசைக் கண்டறிய பி.சி.ஆர் முறைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய ராணுவத்தில் இருக்கும் நாய்களுக்கு மனிதரின் வியர்வை, சிறுநீரிலிருந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா என கண்டறியப் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸைக் கண்டறிய 2 வயது கொண்ட காக்கர் மற்றும் ஒரு வயதுடைய சிப்பிபரை வகை நாய்களுக்குத் திங்களன்று இந்திய ராணுவ முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது 806 கொரோனா பாதித்த மற்றும் பாதிக்காத மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் கொரோனா பாதித்த 22 மாதிரிகள் முன்பு இரண்டு நாய்களும் அமர்ந்து அவற்றை கண்டறிந்தன.
இந்நிலையில், லடாக் மற்றும் காஷ்மீர் பகுதியில் உள்ள எல்லைகளில் ஈடுபட்டு வரும் வீரர்களைச் சோதனை செய்வதற்காக சண்டிகரில் 2 நாய்கள் நிறுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 8 நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. நாய்களுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்பட்ட கொரோனா மாதிரிகள் மலட்டுத்தன்மை வாய்ந்தவை.
இதனால், வைரஸ் நாயின் மூலம் மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பில்லை என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா, பின்லாந்து, லெபனான், ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, பெல்ஜியம் மற்றும் சிலி போன்ற பல நாடுகளும் கொரோனா வைரசைக் கண்டறிய நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.