கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமையில் வாழ்வோர் எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்டுத்திய பல்வேறு விளைவுகளை ஐ.நா மதிப்பீடு செய்து வந்த நிலையில், கொரோனா தாக்கத்தின் நீண்ட கால விளைவுகளையும் மதிப்பீடு செய்யப்பட்டது.
அதன்படி, கொரோனா வைரஸின் தாக்கத்தால் 2030ம் ஆண்டுக்குள் கூடுதலாக 20.70 கோடி மக்கள் கடும் வறுமையில் தள்ளப்படலாம். இதன் காரணமாக 2030-ம் ஆண்டுக்குள் கொடிய வறுமையில் வாழ்வோர் எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனாவால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடியின் 80 சதவீதம், உற்பத்தித்திறன் இழப்பு காரணமாக 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.