உலகம்

“உலகம் முழுக்க வெறுப்பை பரப்பி லாபம் சம்பாதிக்கிறது ஃபேஸ்புக்” - மூத்த பொறியாளர் திடீர் ராஜினாமா!

சமீபகாலமாகவே பலர் ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து தங்கள் பணியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

“உலகம் முழுக்க வெறுப்பை பரப்பி லாபம் சம்பாதிக்கிறது ஃபேஸ்புக்” - மூத்த பொறியாளர் திடீர் ராஜினாமா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர் ஒருவர் அந்நிறுவனம் வெறுப்பைப் பரப்பி வருகிறது எனக் குற்றம்சாட்டி தன்னுடைய பணியை ராஜினாமா செய்துள்ளார்.

சாந்த்வினி என்ற அந்தப் பொறியாளர் “அமெரிக்கா மற்றும் உலக அளவிலும் வெறுப்பைப் பரப்பி அதன் மூலம் லாபம் சம்பாதிக்கும் ஒரு நிறுவனத்துக்குப் பங்களிப்பு செய்வதை மேலும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் நான் ராஜினாமா செய்கிறேன்.” என ஃபேஸ்புக் உள் பணியாளர்கள் அமைப்பில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனம் பணியாளர்களுக்கு ஆதரவான, இணக்கமான ஒரு நிறுவனமாக இருந்தாலும், அதன் தளத்தில் அதிகரித்து வரும் நிறவெறி, பிறழ்தகவல்கள், வன்முறையைத் தூண்டும் பதிவுகள் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் சாந்த்வினி தெரிவித்துள்ளார்.

முக்கியமாக மியான்மரில் நடந்த இனப்படுகொலைகளைத் தூண்டியது, கெனோஷாவில் நடந்த வன்முறை உள்ளிட்ட பல விஷயங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றையெல்லாம் அந்த நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் “செயல்பாட்டுத் தவறுகள்” எனச் சொல்லியுள்ளார்.

மேலும் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் செய்யும் பொய் பிரச்சாரங்களும், அரசியல் விளம்பரங்களில் அளிக்கப்படும் போலித்தகவல்களும் எந்தவித சரிபார்ப்பும் இல்லாமலேயே விட்டுவிடப்படுவதால் அது மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

”இந்நிறுவனத்தில் பணிபுரியும் எங்களைப் போன்ற சிலரின் சிறந்த முன்னெடுப்புகளையும் தாண்டி, ஃபேஸ்புக் வரலாற்றின் தவறான பக்கத்தில் அங்கம் வகிப்பதற்கே விரும்புகிறது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியாவில் பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் இந்துத்துவ பிரச்சாரங்களையும், வெறுப்பு அரசியலையும் ஆதரிக்கும் வகையில் செயல்படுகிறது எனச் சர்வதேச பத்திரிகை ஒன்றில் வெளியான ஆதாரங்களைச் சுட்டிக் காட்டி காங்கிரஸ் கட்சி ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories