பிரபல ஹாலிவுட் திரைப்படமான ‘பிளாக் பாந்தர்’படத்தில் நடித்த சாட்விக் போஸ்மேன் உயிரிழந்தார். கடந்த 2008ம் ஆண்டு வெளியான ‘தி எக்ஸ்ப்ரஸ்: தி எர்னீ டேவிஸ் ஸ்டோரி’ படத்தின் ஒரு சிறிய கதாத்திரத்தின் மூலம் திரையின் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கிய சாட்விக்.
பின்னர் 2013ம் ஆண்டு அமெரிக்க பேஸ்பால் வீரர் ஜாக்கி ராபின்ஸன் கதாபாத்திரத்தில் அவர் நடித்த ‘42’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று சாட்விக் போஸ்மேன் ஒரு அங்கீகாரமிக்க நடிகராக வலம் வந்தார்.
‘42’ படத்தின் வெற்றி புகழ்பெற்ற மார்வெல் யூனிவர்ஸின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளியான ‘பிளாக் பாந்தர்’ படத்தில் நாயகனாக நடித்த சட்விக் போஸ்மேன் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் உள்ளிட்ட படங்களிலும் பிளாக் பாந்தராகவே வருவார்.
2017ம் ஆண்டு சாட்விக் போஸ்மேனை வைத்து ‘ப்ளாக் பேந்தர்’ கதாபாத்திரத்துக்காகவே ஒரு முழு நீள படத்தை தயாரித்தது மார்வெல் நிறுவனம். அதில், வகாண்டா எனும் தனி ராஜ்ஜியத்தையே உருவாக்கி அதனை ஆட்சி செய்து வந்த பிளாக் பாந்தர் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பல விருதுகளையும், ஒட்டுமொத்த கருப்பின மக்களின் பாராட்டுக்களையும் ஆதரவையும் பெற்றிருந்தார் சட்விக் போஸ்மேன்.
இந்த சூழலில் கடந்த 2016ஆம் ஆண்டு போஸ்மேனுக்கு பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் நடிகர் சட்விக் போஸ்மேன்.
ஆனால், அதனை வெளிப்படையாக அவர் அறிவித்ததே இல்லை; சிகிச்சையின் நடுவே திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார் என அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புற்றுநோய் தீவிரமடைந்ததையடுத்து சாட்விக் போஸ்மேன் உயிரிழந்தார்.
இதனை அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். அவரது இந்த திடீர் மரணம் ஒட்டுமொத்த ஹாலிவுட் திரையுலகத்தையே சோகக் கடலில் ஆழ்த்தி உள்ளது. பல பிரபலங்களும், ரசிகர்களும் சட்விக் போஸ்மேன் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.