கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 1,59,41,806 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 6,42,751 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 42,48,327 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,48,490 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பைக் கடுப்படுத்த முடியமால் வல்லரசு அதிபர் திணறி வருகிறார். இந்தச் சூழலில் அமெரிக்காவில் முழு ஊரடங்கு, விமான சேவை ரத்து என பல அதிரடி நடவடிக்கைகள் அந்நாட்டு அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலம் கல்வி பயில அனுமதியும், புதிதாக வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசாவும் வழங்கப்படமாட்டாது என அந்நாட்டி அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க அரசின் குடியுரிமைத்துறை அந்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அந்த அறிக்கையில், மார்ச் 9ம் தேதிக்குப் பிறகு பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படாமல் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சேர விரும்பினால் அவர்களுக்கு விசா வழங்கப்படமாட்டாது. அதற்கு தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது ஏற்கனவே விசா வைத்துள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கும் இந்த விசா தடை பொருந்தும் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் அமெரிக்க கல்வி நிலையங்களில் கல்வி பயில நினைத்த மாணவர்களின் கனவு தகர்ந்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.