மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையிலான சீக்கியர்களின் செயல்பாடுகள் உலகெங்கும் உள்ள மக்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இந்தியாவில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மிகப்பெரிய எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களுக்கு உதவும் வகையில் சீக்கியர்கள் தங்களது குருத்வாராவை திறந்து விடுவதும், அவர்களுக்கு உணவளிப்பதுமாக பல்வேறு சேவைகளைச் செய்து வந்தனர்.
அதேபோல, ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயால் இதுவரை அடைந்திராத இன்னல்களை அனுபவித்த அந்நாட்டு மக்களுக்காக களத்தில் இறங்கி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தனர். அதன் தொடர்ச்சியாக கொரோனாவின் பிடியில் மிகவும் கடுமையாக சிக்கியுள்ள மக்களுக்காக உணவு வழங்குதல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை சீக்கியர்கள் நிவர்த்தி செய்து வருகின்றனர்.
இந்தியாவில் குருத்வாராவை திறந்து உதவி செய்தது போன்று அமெரிக்காவிலும் இந்தச் சேவையை சீக்கியர்கள் தொடர்ந்துள்ளனர். அதன்படி, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த சீக்கியர்கள் என்ற அமைப்பின் மூலம் கொரோனா நோயாளிகளுக்கும், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களுக்கும் உதவிகளை மனமுவந்து செய்து வருகின்றனர்.
தற்போது, அமெரிக்காவில் கொரோனாவுடன் சேர்ந்து நிறவெறிக்கு எதிரான போராட்டமும் தீவிரமடைந்துள்ளது. இதனால், நாட்டின் பல்வேறு மாகாணங்களில் மக்கள் வீதியில் தங்களது போராட்டங்களைத் தொடர்ந்து வருகின்றனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கும் பணியை சீக்கியர்கள் தொடர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குயின்ஸ் வில்லேஜ் பகுதியில் உள்ள குருத்வாராவில் 30 சமையலர்கள் மூலம் சுமார் 1.45 லட்சம் பேருக்கான உணவுகளை தூய்மையான முறையில் தயாரித்து இலவசமாக வழங்கியிருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு உணவுப் பொட்டலங்களும் மருத்துவ நிபுணர்களால் சோதிக்கப்பட்ட பிறகே மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது என்றும், அவ்வாறு உணவுகளை தயாரிக்கப்போர் கட்டாயம் தனிமனித இடைவெளி, மாஸ்க், கையுறைகள் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதன் ஒருங்கிணைப்பாளர் ஹேமந்த் சிங் கூறியுள்ளார்.
தன்னலம் மட்டும் என நினைக்காமல் அவசர இன்னல்களில் தவிக்கும் மக்கள் அனைவருக்கும் தாமாக முன்வந்து உதவிகளைச் செய்து வரும் சீக்கியர்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.