உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவின் வல்லரசு என்ற பிம்பத்தை சுக்குநூறாய் உடைத்திருக்கிறது. கொரோனா பாதிப்பு, பொருளாதார நெருக்கடி, அதிபர் தேர்தல் என பல்வேறு இக்கட்டான காலத்தை சந்திக்கும் அமெரிக்கா தற்போது நிறவெறிக்கு எதிரான போராட்டங்களையும் சந்திக்கிறது.
கடந்த மே 25ம் தேதியன்று, அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் பகுதியில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் நிறவெறி காரணமாக டெரிக் சாவின் என்ற போலிஸாரால் கழுத்தை நெறித்து கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கி வருகிறது.
அப்போது ஜார்ஜ் ஃப்ளாய்ட், ‘என்னால் மூச்சு விடமுடியவில்லை; என்னைக் கொன்றுவிடாதீர்கள்’ என கதறியதும், அவரின் துடிதுடிப்புக்கு சிறிதும் இறக்கம் காட்டாமல் மேலும் தனது முழங்காலை ஜார்ஜ்ஜின் கழுத்தில் வைத்து அழுத்தம் கொடுத்ததுமான வீடியோ இணையத்தில் வெளியாகி கோடிக்கணக்கான மக்களின் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.
இதனையடுத்து, அமெரிக்காவின் அட்லாண்டா, வாஷிங்டன் உள்ளிட்ட இடங்களில் மக்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “நாங்கள் சுவாசிக்கவேண்டும்; எங்களைக் கொல்லாதீர்கள், கொல்வதை நிறுத்துங்கள். எங்களுக்கு நீதி வேண்டும்” என பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருப்பின மக்களின் போராட்டத்திற்கு அமெரிக்காவின் அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சில இடங்களில் போராட்டம் வன்முறையாகவும் மாறியுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவின் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றுள்ளனர்.
குறிப்பாக டெரிக் சாவுவின் மனைவியும் மினசோட்டா அழகியுமான கெல்லே சாவின், ஜார்ஜ் ஃப்ளாய்டின் மறைவுக்கு காரணமாக இருந்த தனது கணவர் டெரிக்கை விவாகரத்து செய்வதாக நோட்டீஸ் விடுத்துள்ளார். அவருடைய செயல் தனக்கு மிகுந்த வேதனையை தந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக நீட்டிக்கப்பட்ட பொதுமுடக்கத்தில் இந்த போராட்டம் மேலும் வீரியம் அடைந்துள்ளது. 5 நாட்களாக நடைபெறும் போராட்டம் தற்போது வேறு வடிவத்திற்குச் சென்றுள்ளது. இதனால் காவல்துறை அதிகாரிகள் தடியடி, கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி கூட்டத்தைத் தணிக்கும் காட்சிகள் அதுதொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
ஆனால் அதேவேளை சில போலிஸ் அதிகாரிகள் எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்து போலிலிஸுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தின. மிருகத்தனம் மற்றும் இனவெறி எதிர்ப்பு இயக்கத்துடன் தங்களின் ஒற்றுமையைக் காட்டுவது அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஜெனீசி கவுண்டி பகுதியில் பாதுகாப்பிற்கு இருந்த போலிஸார் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தும், நிறவெறிக்கு எதிராக தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்வதற்காக மண்டியிட்டு தலை குணிந்து தங்கள் தடிகளை கீழே வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அதேப்போல், கலிபோர்னியாவின் சாண்டா குரூஸில் பாதுகாப்பில் இருந்த போலிஸ் அதிகாரி, ஜார்ஜ் ஃபிலாய்டின் நினைவாகவும், கறுப்பின மக்களுக்கு எதிரான போலிஸ் வன்முறை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்.
இதேப்போல் நகரின் பல்வேறு பகுதியில் நடக்கும் போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலிஸார் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நிறவெறிக்கு எதிராக பெரும் புரட்சிக்குத் தயாராகும் அமெரிக்கா போராட்டக்காரர்களுடன் இணைந்து களத்தில் குதித்த போலிஸாரின் இந்த நடவடிக்கைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.