உலக வல்லரசான அமெரிக்காவில் கொரோனா தாக்கத்துக்கு இடையே நிறவெறி தாக்குதலும் தலைத் தூக்கியுள்ளது. கடந்த மே 25ம் தேதியன்று, அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் பகுதியில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் நிறவெறி காரணமாக டெரிக் சாவின் என்ற போலிஸாரால் கழுத்தை நெறித்து கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கி வருகிறது.
அப்போது ஜார்ஜ் ஃப்ளாய்ட், ‘என்னால் மூச்சு விடமுடியவில்லை; என்னைக் கொன்றுவிடாதீர்கள்’ என கதறியதும், அவரின் துடிதுடிப்புக்கு சிறிதும் இறக்கம் காட்டாமல் மேலும் தனது முழங்காலை ஜார்ஜ்ஜின் கழுத்தில் வைத்து அழுத்தம் கொடுத்ததுமான வீடியோ இணையத்தில் வெளியாகி கோடிக்கணக்கான மக்களின் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.
இதனையடுத்து, அமெரிக்காவின் அட்லாண்டா, வாஷிங்டன் உள்ளிட்ட இடங்களில் மக்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “நாங்கள் சுவாசிக்கவேண்டும்; எங்களைக் கொல்லாதீர்கள், கொல்வதை நிறுத்துங்கள். எங்களுக்கு நீதி வேண்டும்” என பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கருப்பின மக்களின் போராட்டத்திற்கு அமெரிக்காவின் அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சில இடங்களில் போராட்டம் வன்முறையாகவும் மாறியுள்ளது.
முன்னாள் அதிபர் ஒபாமா உட்பட பலரும் ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், போலிஸாரின் நிறவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், கடுமையான தண்டைகள் ஏதும் அளிக்கப்படாமல் வெறும் பணி நீக்க நடவடிக்கைக்கு மட்டும் ஆளாகியுள்ள டெரிக் சாவுவின் மனைவியும் மினசோட்டா அழகியுமான கெல்லே சாவின், ஜார்ஜ் ஃப்ளாய்டின் மறைவுக்கு காரணமாக இருந்த தனது கணவர் டெரிக்கை விவாகரத்து செய்வதாக நோட்டீஸ் விடுத்துள்ளார். அவருடைய செயல் தனக்கு மிகுந்த வேதனையை தந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது எனக் கூறி அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் கெல்லே தெரிவித்துள்ளார்.