உலகம் முழுவதும் தனது கொடூரத்தை கொரோனா நிகழ்த்திக்கொண்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 48,135 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,46,873-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 13,155 பேரும், ஸ்பெயின் நாட்டில் 10,003 பேரும் பலியாகி உள்ளனர். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் கடும் பாதிப்புகளைச் சந்திந்து வருகிறது.
குறிப்பாக, முதல் முறையாக அங்கு ஒரே நாளில் ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 914 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 4,081 ஆக உள்ளது. கடந்த 3 நாளில் பலி எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.
இவ்வளவு பெரும் பாதிப்புகளைழ் சந்தித்து வரும் அமெரிக்கா, தனது சர்வதிகாரப் போக்கை கைவிடாமல் போருக்கு வழிவகுத்து வருகிறது. குறிப்பாக, ஈரானை மீண்டும் வம்புக்கிழுக்கத் துவங்கியுள்ளது. உலகமே கொரோனா என்னும் பெரும்தொற்றை எதிர்க்கும் நேரத்தில் ஈரானுக்கு எச்சரிக்கும் விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில், “ஈரான் படைகள், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. ஒருவேளை அதுபோல தாக்குதல் நடந்தால், ஈரான் அதற்கு மிக அதிகமான விலையைக் கொடுக்கவேண்டியது வரும்” என எச்சரிக்கும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழலில் ஈரான் அப்படி எந்தவொரு தாக்குதலுக்கும் முன்வரவில்லை என்றும் எங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறோம் என ஈரான் உயர் அதிகாரிகள் ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் ஏன் ஈரான் மீது அமெரிக்கா பழி சுமத்த விரும்புகிறது என்று ஆராய்ந்தால் ஈரானுக்கு சக நாடுகள் உதவி செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை எனத் தெரிகிறது.
கொரோனாவால் ஈரானில் 3,000 பேர் பலியாகியுள்ளனர். 47,593 பேர் பாதிக்கபட்டுள்ளனர். போதிய மருத்துவ வசதிகள் இல்லாமால் ஈரான் தவித்து வருகிறது. தங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை பிற நாடுகள் உதவி செய்யவேண்டும் என ஈரான் அரசு கடந்த வாரம் கோரிக்கை வைத்தது.
ஈரானுக்கு மருத்துவ உபகரணங்கள் கிடைக்காமல் போனதற்கு ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடையே காரணம். பொருளாதார தடை காரணமாக மருத்துவ உபகரணங்க இல்லாமல் கொரோனாவுக்கு மருத்துவம் அளிக்க முடியாமல் உள்ளனர். ஆனால் அமெரிக்காவின் தடைக்கு மத்தியிலும் கொரோனாவை எதிர்த்து ஈரான் தீவிரமாக போராடி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி ஈரான் அரசின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகள் மருந்துகள், மருத்துவ உபகரணங்களை ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஈரானுக்கு இவர்கள் செய்த உதவியைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில்தான் ஈரானை அமெரிக்கா மிரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவின் இந்த அனுகுமுறை உலக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.