உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 21, 200ஐ நெருங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,22,566ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,08,388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவைத் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் 12 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 657ஐ தாண்டி உள்ளது. தமிழகத்திலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில், கொரோனா பாதிப்பில் தற்போது அதிகம் பாதிக்கப்படும் நாடாக ஸ்பெயின் உள்ளது. ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து தீவிரமாக இருந்து வருகிறது. அங்கு செவ்வாய்க்கிழமை மட்டும் ஒரே நாளில் 514 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2991-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,058-ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் இத்தாலிக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் விளங்குகிறது.
அதேப்போல், அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் 55,000-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 25,000 பேர் நியூயார்க்கைச் சேர்ந்தவர்கள்.
அமெரிக்காவில் கொரோனா பலி 800 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பின் உயிர்பலி உலக மக்களஒ நடுங்கச் செய்துள்ளது. மக்கள் ஊரடங்கைக் கடைபிடிப்பதே ஒரே வழி. விரைந்து நடவடிக்கை எடுக்க ஐ.நா-வும் வலியுறுத்திவருகிறது.