உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ், இத்தாலியில் பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் வூஹான் நகரம் தான் கொரோனா பாதிப்பைச் சந்தித்த முதல் பகுதி. இன்றுவரை சீனாவில் கொரோனாவால் 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது இத்தாலி. மொத்த இத்தாலியும் மரணக் குழியில் விழுந்துகிடக்கிறது. மக்கள் தொகையில் 70 சதவீதம் வரை வயதானவர்களைக் கொண்டுள்ள இத்தாலியில் இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலகையே ஆளப்போவதாக முழங்கிய முசோலினியின் நாடு மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்து வருகிறது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. குடும்பத்தினரை இழந்தவர்களின் ஓலங்கள் இத்தாலி முழுவதும் எதிரோலிக்கிறது.
இத்தாலி மருத்துவ வசதி படைத்த நாடாகத்தான் உள்ளது. இந்த பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதியான லோம்பாட்டி சீனாவுடன் அதிகமான நேரடி வர்த்தகத்தில் ஈடுபட்ட பகுதியாகும். சீனாவில் இருந்து வந்தவர்கள் மூலமே வைரஸ் பாதிப்பு பரவியதாக அந்நாட்டு சுகாதாரத்துறை கூறுகிறது. மேலும், பாதிப்பு அதிகமாகும் என அந்நாட்டு அரசு மக்களை எச்சரித்துள்ளது. அரசு மற்றும் மக்களின் அஜாக்கிரதையாலேயே இத்தகைய பேரழிவை இத்தாலி சந்திக்கிறது.
இந்தப் பேரழிவில் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி உலக நாடுகளிடம் இத்தாலி கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில், கம்யூனிச கியூபா தனது மருத்துவக் குழுவை அனுப்புவதாக இத்தாலிக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கான சிகிச்சை மருந்துகளை சீனா உதவியுடன் பெருமளவில் தயாரித்து மருத்துவக் குழுவை இத்தாலிக்கு அனுப்பியது கியூபா. முன்னதாக வெனிசுலா, நிகாராகுவா, ஜமைக்கா, சுரிநேம், கிரிநடா என ஐந்து நாடுகளுக்கு தனது மருத்துவக் குழுவை அனுப்பிய கியூபா ஆறாவதாக தற்போது இத்தாலிக்கு அனுப்பியிருக்கிறது.
கியூபாவில் இருந்து சென்ற 52 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் இத்தாலி விமான நிலையங்களுக்குச் சென்றபோது பெரும் பணக்காரர்களை கொண்ட இத்தாலி தங்கள் நெஞ்சம் நிறைந்த மரியாதையை கைதட்டம் மூலம் தெரிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இத்தாலிக்குச் சென்ற மருத்துவக் குழு தனது பணியைச் செய்ய துவங்கியுள்ளது. அங்கு அந்நாட்டு அரசு மருத்துவ குழுவிற்குத் தேவையான உதவிகளை செய்துவருகிறது.
முன்னதாக 1,000த்திற்கும் மேற்பட்டோருடன் கரீபியன் பகுதியில் வந்த கப்பலில் பயணித்த பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
உலகின் பல நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்ளும் என்ற எண்ணத்தில் அந்தக் கப்பலுக்கு அனுமதி மறுத்த நிலையில், கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் அந்த மனிதர்களைக் காப்பாற்றுவதே தலையாய கடமை என்று அவர்களை அனுமதித்து, சிகிச்சை அளித்து மனிதநேயத்தை உலகிற்கு உணர்த்தியுள்ள கியூபா தற்போது இத்தாலிக்கு மருத்துவக் குழுவை அனுப்பி மீண்டும் மனிதநேயத்தை வலியுறுத்தியுள்ளது.