அசட்டுத்தனம் கொண்டவனாக, அடக்கமாட்டாமல் சிரிப்பவனாக, முறைப்பவனாக கறுப்பின சிறுவனின் புகைப்படங்கள் மீம்களாக, வீடியோக்களாக சமூகவலைதளங்களில் சமீபகாலமாக அதிகமாகப் பரவி வருகின்றன.
உண்மையில், அந்த மீம்களில் இருப்பது சிறுவன் அல்ல; 38 வயதுகொண்ட கறுப்பின இளைஞர். அவரது பெயர் ஒசிட்டா ஐஹீம். மொழி கடந்து, இனம் கடந்து உலக மக்களையெல்லாம் புன்னகைக்க வைக்கும் ஒசிட்டாவின் பிறந்தநாள் இன்று.
நைஜீரிய நாட்டுத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஒசிட்டா பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்போது வைரலாகி வரும் ஒசிட்டாவின் ரியாக்ஷன்கள் அனைத்தும் அவர் நடித்த படங்களில் இடம்பெற்றவைதாம்.
2003-ஆம் ஆண்டு ‘சினேடு ஐகீடிஸ்’ என்ற நடிகருடன் சேர்ந்து ஒசிட்டா ஐஹீம் நடித்த ‘அகி நா உக்வா’ என்ற திரைப்படம் சூப்பர்ஹிட்டான பிறகு ஒசிட்டா பரவலாகக் கவனிக்கப்பட்டார். அத்திரைப்படத்தில் அவர் ‘பாவ் பாவ்’ என்ற கதாபாத்திரத்தில் ஒரு குறும்புக்காரச் சிறுவனாக நடித்தார்.
அதன் பின்னர், சிறுவனாக மட்டுமல்லாது வயது வந்த கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கத் தொடங்கினார் ஒசிட்டா. தொடர்ந்து, வியக்கத்தக்க வகையில் நடிப்பை வெளிப்படுத்தி நைஜீரிய சினிமா உலகில் முக்கிய இடத்தையும் பிடித்தார்.
‘ஆப்ரிக்காவின் ஆஸ்கார்’ என்று அறியப்படும் ஆப்பிரிக்கன் மூவி அகாடமி அவார்ட் நிகழ்வில் 1998-ம் ஆண்டு ஒசிட்டா ஐஹீமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது வெறும் 16.
‘Inspired Movement Africa’ எனும் அமைப்பை நிறுவி இளம் ஆப்பிரிக்கர்களை ஊக்குவித்து வரும்m ஒசிட்டா ஐஹீம், ‘இன்ஸ்பைர்ட் 101’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
2007ம் ஆண்டில் ஆப்பிரிக்க திரைப்பட விருது நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருது, 2014ம் ஆண்டில் ஆப்பிரிக்கா மேஜிக் வியூவர் சாய்ஸ் விருது விழாவில் சிறந்த நடிகர் விருது ஆகிய மதிப்புமிகு விருதுகளையும் பெற்றுள்ளார்.
நைஜீரிய திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு ஒசிட்டா அளித்த பங்களிப்புக்காக, 2011ஆம் ஆண்டில் ஜனாதிபதி குட்லக் ஜானதனால், கௌரவமிக்க விருதான ஃபெடரல் குடியரசின் (MFR) விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.