அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா துவங்கியது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்ப்பெட் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முன்னணி திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழா தொகுப்பாளர்கள் இல்லாமல் நடைபெறுகிறது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஜோக்கர், பாரசைட், 1917 உள்ளிட்ட 9 படங்கள் சிறந்த படங்களுக்கான நாமினேஷனில் இடம்பெற்றன.
அதன்படி, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கர் படத்தில் நடித்த வாக்கின் பீனிக்ஸ் வென்றார். அதேபோல், சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை ஜூடி படத்தில் நடித்த ரென்னி வென்றுள்ளார்.
அதுமட்டுமின்றி, சிறந்த ஒலிக் கலவைக்கான விருதை ‘1917’ திரைப்படம் வென்றது. ‘1917’ திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் என 3 பிரிவுகளில் ஆஸ்கர் விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கின் பீனிக்ஸ் ஆஸ்கர் வெற்றத்தை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் ‘ஜோக்கர்’ மற்றும் வாக்கின் பீனிக்ஸ் என்ற இரண்டு ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகின்றன.