சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக இருந்த நிலையில் தற்போது 41 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1300-க்கும் மேலானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா உயிர்க்கொல்லி வைரஸ் சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பரவி வருகிறது.
மேலும் அதன் தாக்கம் ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பினால் உலக முழுவதும் உள்ள மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. நாட்டின் பல இடங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தொற்று இருக்கும் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, சீனாவின் வூஹான், ஷாங்காய், பெய்ஜிங், தியான்ஜின், சோங்கிங் ஆகிய நகரங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் சுமார் 3 கோடி பேர் வெளி உலகுடனான தொடர்பில் இருந்து தள்ளிவைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளுக்கு அலைய முடியாது என்பதால் வூஹான் நகரில் வைரஸ் தாக்குதலுக்கென பிரத்யேக மருத்துவமனை ஒன்றை சீன அரசு கட்டத் தொடங்கியுள்ளது.
அதற்காக 25 ஆயிரம் சதுர மீட்டர் இடம் ஒதுக்கப்பட்டு 1,000 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையை வேறு 6 நாட்களில் கட்ட அந்நாட்டு அரசு முடிவு செய்து பணியைத் தொடங்கியுள்ளது. மருத்துவமனை கட்டும் பணிக்காக நூற்றுக்கணக்கான பொக்லைன் இயந்திரங்கள் முழுவீச்சில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அதன்படி பிப்ரவரி 3ம் தேதி இந்த மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.