ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் கடந்த 8-ந் தேதி தாக்குதல் நடத்தியது. அதற்கு முன்னதாக ஈரான் நாட்டின் இராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணை வீசிக் கொன்றதற்காக இத்தகைய பதிலடி தாக்குதலை ஈரான் மேற்கொண்டது.
இந்த தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என ஈரான் கூறிவரும் நிலையில், அமெரிக்கா மறுத்துவருகிறது. இந்தத் தாக்குதலை அடுத்து இருநாட்டு தலைவர்களுமே வார்த்தைப் போர் மூலம் ஆயுதம் தாங்கிய போரைக் கொண்டுவர முயற்சி செய்வதாக உலக நாடுகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இருநாட்டு பிரச்னைகளை தீர்த்து வைக்க பல உலக நாடுகள் முன்வந்துள்ளன. மேலும் பல நாடுகள் ஈரானுக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலாட் விமானப்படை தளத்தில் உள்ள அமெரிக்க படை தளத்தின் மீது நேற்று ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த தாக்குதலுக்கு 8 ‘கட்யுஷா’ ரக ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஈரானின் உள்ள ஊடங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தற்போது அமெரிக்காவின் படைகள் இல்லையென்றும், அமெரிக்காவின் இராணுவம் தங்களின் தளங்களை இடம் மாற்றிக்கொண்டதாகவும் ஈராக் ராணுவ வட்டாரங்கள் கூறி வருகின்றன.
இருப்பினும் சில ஏவுகணைகள் பலார் விமானப்படை ஓடுபாதையில் இருந்து வெடித்ததாகவும், அப்போது பாதுகாப்பில் இருந்த இராணுவ வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் சலாஹுதின் மாகாண இராணுவ அதிகாரி முகமது கலீல் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை ஈரான் பொறுப்பேற்கவில்லை. அதுமட்டுமின்றி, உக்ரைன் விமான விபத்து ஏற்படுத்தியதற்காக ஈரான் அரசுக்கு எதிராக உள்நாட்டில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் அங்கு மீண்டும் பதற்றச் சூழலை உருவாக்கியுள்ளது.