மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டின் மன்னர் சுல்தான் காபூஸ்பின் சைத் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இது தொடர்பாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது, சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மன்னர் காபூஸ் தீவிர சிகிச்சையில் இருந்தார்.பெல்ஜியம் சென்றுவிட்டு நாடு திரும்பிய அவர் நேற்று உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுல்தான் காபூஸின் மறைவுக்கு உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
79 வயதான ஓமன் மன்னர் காபூஸ் 1970ம் ஆண்டு அந்நாட்டின் மன்னராக பதவியேற்றதில் இருந்து அந்நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர். அரபு நாடுகளின் ராஜாவுக்கு என்று வகுக்கப்பட்டுவரும் எந்த நிலைக்குள்ளும் பொருந்தாத மனிதராகவே விளங்கினார் காபூஸ்.
மனைவி, குழந்தைகள் என எந்த உறவுக்குள்ளும் இருக்காமல் தனி மனிதராகவே 50 ஆண்டுகளாக வாழ்ந்தவர் சுல்தான் காபூஸ். எப்போதெல்லாம் மத்திய கிழக்கு நாடுகளில் அசாதாரண சூழல் நிலவுகிறதோ அப்போதெல்லாம் நல்லெண்ண தூதராக இருந்து செயல்பட்டவர் காபூஸ். அமைத்திக்காக போராடியவர். பாலைவனமாக இருந்த ஓமன் நாட்டை எண்ணெய் வளமிக்க பூமியாக மாற்றினார்.
அனைவரிடத்திலும் அன்பை வார்த்தெடுத்தவர். அண்டை நாடுகளில் தாக்குதல் நடைபெறும் போது தன்னுடைய படையை அனுப்பாமல், ஆபத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவர். வெளிநாடுகளில் இருந்து பணி நிமித்தமாக ஓமனுக்கு வருவோர்களை தன்னாட்டு மக்களாகவே பாவித்தவர் மன்னர் காபூஸ்.
தற்போது அவர் காலமாகியுள்ள நிலையில், ஓமன் நாட்டின் அடுத்த மன்னர் யார் என்பதை அறிவித்தாலும் சுல்தான் காபூஸ் போன்ற ஆட்சியை அளிப்பார்களா இல்லையா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கும் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.