ஈரான் - அமெரிக்கா போர் பிரச்சனை கூறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில், “ஈரான் - சவுதி அரேபியாவின் நட்புறவுகளை வளர்ப்பதற்கு பாகிஸ்தான் முயற்சி செய்யும்.
அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் இனி எந்தப் போரிலும் பங்குபெறப் போவதில்லை. கடந்த காலங்களில் மற்ற நாடுகளின் போர்களில் பங்கெடுத்ததன் மூலம் தவறுகளைச் செய்துள்ளோம். தற்போது அந்த தவறுகளை மீண்டும் செய்யப்போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஈரான் வான் எல்லை வழியாக ஏர்-இந்தியா விமானங்கள் பறக்காது என்று ஏர்-இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் ஈரான் வழியாக செல்ல வேண்டிய விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஈரான் நாட்டு வான் எல்லையில் எங்களது விமானங்கள் பறக்காது என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இந்திய விமானங்கள் ஈராக், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகள் மீது பறப்பதை தவிர்க்குமாறு இந்திய விமானங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலில் 80 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்படவில்லை. தற்காப்புக்காகவே தாக்குதல் நடத்தியுள்ளோம். ஈரான் மக்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தோம் என அமெரிக்க படைத்தளங்களை தாக்கியது குறித்து ஈரான் அமைச்சர் ஜாவீத் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், “எல்லாம் நன்மைக்கே. ஈராக்கில் உள்ள இரண்டு இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
அங்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிர்ச்சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உலகிலேயே சக்தி வாய்ந்த மற்றும் சிறந்த ஆயுதங்கள் கொண்ட இராணுவம் எங்களிடம் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் அன் அல் ஆசாத் மற்றும் ஹாரிர் கேம்ப் ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படையினர் 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.