ஆஸ்திரேலியாவின் சிட்னி, விக்டோரியா உள்ளிட்ட மாகாணங்களைச் சுற்றி காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயினால் சுமார் 70 லட்சம் மக்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரையில் ஆஸ்திரேலிய காட்டுத்தீயால் 23 பேர் பலியாகி உள்ளனர். மேலும் லட்சக்கணக்கான விலங்குகள் தீக்கிரையாகியுள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்லப் போவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாவில் மிக அதிகளவில் தண்ணீர் குடிக்கும் ஃபெரல் வகை ஒட்டகங்கள் அதிகம் உள்ளன. மிக அதிகளவில் தண்ணீர் குடிப்பதனால் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு அதிகம் எழுந்தது.
குறிப்பாக, கடுமையான வறட்சிக் காலங்களில் மனிதர்கள் குடியிருப்புப் பகுதிக்கு வந்து தண்ணீரை ஒட்டகங்கள் குடித்துவிடுவதாகவும், வீட்டு வேலிகளை தட்டுவதுடன், ஏ.சியில் வழியும் நீரை குடிப்பதற்காக வீடுகளைச் சுற்றிச் சுற்றிவந்து இடையூறு செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும் இந்த ஒட்டகங்களின் கழிவுகள் ஒரு டன் கார்பன்-டை-ஆக்சைடுக்கு நிகரான மீத்தேன் வாயுவை உருவாக்குவதாகவும், இது புவி வெப்பமயமாதலுக்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக சுமார் 10 ஆயிரம் ஃபெரல் ஒட்டகங்களை சுட்டுக்கொல்லவுள்ளனர். ஒட்டகங்களை ஹெலிகாப்டர்களில் பறந்தபடி சுடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக கைதேர்ந்த ஆட்களை வைத்து இந்த பணியை இன்று தொடங்கியுள்ளது ஆஸ்திரேலிய அரசு.
ஏற்கனவே காட்டுத்தீயால் விலங்கள் அதிகம் உயிரிழந்த நிலையில், அரசு ஒட்டகங்களை கொள்ள முயற்சிப்பது விலங்கள் நல ஆர்வலர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தண்ணீரை அதிக அளவில் குடிப்பதாக கூறி ஒட்டகங்களை கொல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது உலகமெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.