அமெரிக்கா மற்றும் ஈரான், ஈராக் நாடுகளின் மோதல் போக்கு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்தது. இந்த மோதல் போக்கு தற்போது போர் மூளும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில், ஈரானின் ராணுவ தளபதி காஸ்சிம் சுலைமானி மற்றும் 6 பேர் கொல்லப்பட்டனர். அடுத்த நாளே, ஈரானில் நடந்த அவரது இறுதிச் சடங்கு அணிவகுப்பில் மீண்டும் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவ படை மீது ஈரான் ஆதரவு கிளர்ச்சி படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த வாரம் சூறையாடப்பட்டது.
இந்த பிரச்சனையை முடித்துக்கொள்ள விரும்பாத அமெரிக்கா தற்போது மீண்டும் ஈரான் நாட்டை எச்சரிக்கும் வகையில் பல மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் ஈரானை எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக, ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 52 ஈரானிய தளங்களை குறிவைத்துள்ளதாகவும் அவை பல ஆண்டுகளுக்கு முன்பு ஈரானால் பிடிபட்ட 52 அமெரிக்க பணையக்கைதிகளை குறிக்கும் எனத் தெரிகிறது.
நாங்கள் குறிவைத்துள்ள இந்த இடங்கள் "ஈரான் மற்றும் ஈரானிய கலாச்சாரத்திற்கு, மிக உயர்ந்த மட்டத்தில் முக்கியமானவை" என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் மிகவும் வேகமாகவும் மிகவும் கடினமாகவும் இருக்கும். அமெரிக்கா இனி அச்சுறுத்தல்களை விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு அஞ்சாமல், “கலாச்சார பாரம்பரியத்தை அழிப்பது ஒரு போர்க்குற்றம்” என ஈரான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதலடி கொடுத்துள்ளது.