சூடான் நாட்டின் தலைநகர் கார்டூமில் பீங்கான் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையில் தமிழர்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை ஆலையில் இருந்த எரிபொருள் நிரம்பிய லாரி வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்தில் ஆலை முழுவதும் தீக்கிரையானது.தீவிபத்து ஏற்பட்டபோது ஆலையில் 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றிக் கொண்டு இருந்துள்ளனர்.
தீ விபத்தில் மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 130க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும், மேலும் 3 தமிழர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சூடானில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பான சோகமான செய்தி தற்போது வந்துள்ளது. இதில் இந்திய தொழிலாளர்கள் சிலர் உயிரிழந்துவிட்டார்கள். மேலும், சிலர் படுகாயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
வெளியுறவுத் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்துள்ளனர். +249- 921917471 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இதுதொடர்பாக தகவல்களை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சமூகவலைதளத்தில் தொடர்ந்து வெளியிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
`இந்தியா இன் சூடான்' என்ற வெளியுறவுத் துறையின் ட்விட்டர் பக்கத்தில் தீ விபத்தில் காணாமல் போன இந்தியர்களின் விவரங்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்குமார், ராஜஸ்தானைச் சேர்ந்த ரவீந்தர் சிங், பீகாரைச் சேர்ந்த நீரஞ் குமார் ஆகியோர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பூபாலன், முகமது சலீம் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சோனு பிரசாத், ராஜஸ்தானைச் சேர்ந்த சுரேந்தர் குமார் ஆகியோர் பொது வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த ராம கிருஷ்ணன், ராஜசேகர், வெங்கடாசலம் உட்பட இந்தியர்கள் 16 பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. காணாமல் போனவர்களின் விவரங்களில் இறந்தவர்களின் பெயர்களும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.