லத்தீன் அமெரிக்க நாடான சிலியில் கடந்த 6 வாரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை எதிர்த்து சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் மாணவர்கள் நடத்திய போராட்டம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்போராட்டமாக மாறியுள்ளது.
பொருளாதார தேக்கநிலை; அனைவருக்கும் கல்வி என தொடங்கிய முழக்கம் அதிபர் பதவி விலகக் கோரும் போராட்டமாக மாறியுள்ளது. அரசின் பேச்சுவார்த்தை எதுவும் மக்கள் நலன் கருதி இல்லையென மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். அமைதியாக நடைபெற்ற போராட்டம் போலிஸாரின் கட்டுப்பாடுகளால் சில இடங்களில் வன்முறையாகவும் மாறியது.
அதையடுத்து அடுத்தடுத்த நாள்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதல் போக்கும் அதிகரித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் மெட்ரோ நிலையங்கள், அரசு அலுவலகம் என அடித்து நொறுக்கினர். மக்கள் பயன்படுத்தி வந்த மெட்ரோ சேவையும் முடங்கியது.
இதனிடையே போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த சிலி அதிபர் பெனெரா நாட்டின் பாதுகாப்பு கருதி என முழுப் பொறுப்பையும் ராணுவத்திடம் ஒப்படைத்தார். இதனையடுத்து உள்நாட்டில் எமர்ஜென்ஸி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் துவங்கினர். அதன்படி நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது பைக்கில் வந்த போலிஸார் போராட்டக்கார்களை அடித்து விரட்டினர்.
அப்போது போலிஸாரின் தாக்குதலில் இருந்து தப்பி ஓடிய இளைஞர் ஒருவர் தவறி கீழே விழுந்துவிட்டார். அவரை ஒரு போலிஸார் வழிமறைக்க மற்ற போலிஸ் ஒருவர் இருசக்கர வாகனத்தைக் கொண்டு அவர் மீது ஏற்றுகிறார். இந்த சம்பவத்தைப் பார்த்த பெண்கள் போலிஸாரின் செயலை தடுத்து இளைஞரை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை பார்த்த குடியிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், சிலி நாட்டில் போலிஸாரின் இந்தக் கொடூர தாக்குதலுக்கு கண்டனம் குவிந்து வருகிறது. மேலும் இதுபோல போராட்டத்தின் போது போலிஸார் தாக்கி 26 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 13,000 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.