வங்கதேசத்தில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மாணவி நுஸ்ரத் ஜஹான் ரஃபி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிக்கூட வளாகத்தில் தலைமையாசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்கப்பட்டார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் தலைமை ஆசிரியர் சிராஜ் உத் துலா மீது வழக்குப் பதிவு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் மாணவி ரஃபி-யிடம் மிரட்டி வழக்கை வாபஸ் பெற வைக்க அடியாட்கள் சிலரை அனுப்பியுள்ளார்.
அதில் ரஃபியுடன் படிக்கும் சில மாணவர்களுக்கும் இருந்துள்ளனர். வகுப்பறையில் இருந்த மாணவி ரஃபியை பள்ளியின் மாடிக்கு இழுத்துச்சென்றுள்ளனர். அங்கு மாணவியை வழக்கை வாபஸ் பெறுமாறு கட்டாயப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாலியல் புகாரை வாபஸ் பெற மாணவி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அடியாட்கள் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொழுத்தினர். இதனையடுத்து மாணவி ரஃபியை சக மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும் ரஃபி சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 10ம் தேதி உயிரிழந்தார்.
இதற்கு முன்னதாக காவல்துறையிடம் மாணவி ரஃபி அளித்த புகார் தொடர்பான வீடியோவும் வைரலாக பரவியது. இந்த சம்பவம் நாடு முழுவதையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் அங்குள்ள ஜனநாயக அமைப்பினர் தலைநகர் டாக்காவில் நடத்திய போராட்டம் தீவிரமடைந்த நிலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிப்பதாக பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்திருந்தார். நீதிமன்றமும் இந்த வழக்கை தாமாக முன்வந்து வழக்கை ஏற்று விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை நேற்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 16 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். விசாரணைக்கு 62 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்ப்பு விரைவாக வெளியிடப்பட்டது.
மேலும், கொலைக்குப் பிறகு வங்கதேசம் முழுவதும் சுமார் 27,000 பள்ளிகளுக்கு பாலியல் வன்முறைகளைத் தடுக்க குழுக்களை அமைக்க உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.