லெபனான் நாட்டில் உள்ள அரசு பொருளாதாரத்தை சீர்படுத்த எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை; சமூக வலைதளங்களுக்குக் கூட வரி விதிக்கப்படுவதாகக் கூறி, மக்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலில் சிறிய அளவில் தொடங்கிய போராட்டம் பின்பு நாடு முழுவதும் பரவி மக்கள் ஆங்காங்கே ஒன்றுகூடிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என தொடங்கிய இந்த போராட்டம் அரசு அலுவலர்களும் பங்கேற்கும் போராட்டமாக மாறியுள்ளது.
உரிமைக்காக போராடுபவர்களை கொச்சைப்படும் நோக்கில் சில முதலாளித்துவ ஊடகங்கள் லெபனான் மக்கள் தேவையற்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், அங்கு வன்முறையாளர்களால் மக்கள் அவதிப்படுவதாகவும் செய்திகளைத் திரித்து வெளியிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபோல போலி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் லெபனான் நாட்டின் பாப்டா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் வீடியோவை போராட்டக்காரர்கள் பகிர்ந்துள்ளனர்.
அதில், போராட்டக்காரர்கள் மத்தியில் சிக்கிக்கொண்ட காரில் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை கூட்டத்தைப் பார்த்ததும் அழத் தொடங்கியது.
உடனே அவரது தாயார் கூட்டத்தில் உள்ள இளைஞர்களிடம் இதுகுறித்துச் சொல்லவும் அந்த இளைஞர்கள் அந்நாட்டு குழந்தைகளுக்கு பிடித்தமான ‘பேபி ஷார்க்’ என்ற பாடலை பாடுகிறார்கள்.
பாட்டுச் சத்தத்தைக் கேட்ட குழந்தை தனது அழுகையை நிறுத்திக்கொள்ள கூடியிருந்த அனைவரும் ஒரே ராகத்துடன் அந்தப் பாடலை பாடுகிறார்கள். மேலும், குழந்தையை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக நடனமும் ஆடுகிறார்கள். இந்த வீடியோ பார்க்கும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பலரும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பின்னர் இதுகுறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த குழந்தையின் தாய் எலியனே ஜாபுவார், “ குழந்தை தனது அழுகையை தொடங்கியதும் என்னால் சமாதானம் செய்து வைக்கமுடியாது என எண்ணி மிகவும் அச்சமடைந்தேன்.
குழந்தை பயப்படுகிறது என்று சொன்னதும் அவர்கள் அனைவரும் குழந்தைகளுக்குப் பிடித்த பாடலைப் பாடினார்கள். அது ஒரு அற்புத தருனம். இந்தச் சம்பவத்தை எனது கணவரிடம் சொல்லவேண்டும் என நினைத்தேன், ஆனால் அதற்குள் அந்த சம்பவம் தொடர்பான வீடியோ என் கணவருக்கே காணக் கிடைத்தது.
என் குழந்தை வளர்ந்ததும் அந்த வீடியோவை காட்டிச் சொல்வேன். இது உனக்கான போராட்டம். லெபனானின் போராட்டக்காரர்கள் உனக்காகவும் போராடினார்கள். குழந்தையை மகிழ்ச்சிப்படுத்திய இளைஞர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும். மக்கள் போராட்டத்தில் வன்முறை இல்லை. அன்புதான் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.