உலகம் முழுவது இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது. அந்த அளவுக்கு தகவல் தொடர்பில் முக்கிய அங்கமாக உள்ளது வாட்ஸ் ஆப் செயலி.
இந்த செயலியை ஆண்ட்ராய்டு, ஆப்பிள் இயங்கு தளத்தில் உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால் பயனர்களைக் கவரும் பல வசதிகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
குறிப்பாக வீடியோ, புகைப்படங்கள், தரவு என அனைத்தையும் அனுப்பவோ பெற்றுக்கொள்ளவோ முடியும். இந்நிலையில் இந்த வசதிகளை அனுப்பவதற்கு வரி விதிக்கப்படும் என்றால் என்ன செய்வீர்கள்? அப்படி ஒரு சம்பவமும் நடைபெற்றுள்ளது.
லெபனான் நாட்டு அரசு அந்நாட்டு மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப் செயலியை வரி விதித்துள்ளது. அதாவது முக்கிய சமூக வலைதளங்களான வாட்ஸ் ஆப், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஃபேஸ் டைம் போன்ற முக்கிய ஆப்களில் இருந்து பிறருக்கு வீடியோ அனுப்பினாலும், பெற்றாலும் அதற்கான சேவைக் கட்டணமாக 0.20 டாலர்கள், இந்திய மதிப்பில் 14 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் ஆத்திரத்தில் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்தனர். இந்தப் போராட்ட செய்தி தீயாய்ப் பரவியதை அடுத்து நாடு முழுவதும் உள்ள மக்கள் அரசின் இந்த திட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலிஸார் கட்டுப்படுத்த முயன்ற போது போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது.
நிலைமை மோசமானதை அடுத்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் லெபனான் அரசு வேறு வழியில்லாமல் வாட்ஸ் ஆப், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஃபேஸ் டைம் செயலிகள் மீது விதிக்கப்பட்ட வரியை விலக்கிக் கொண்டது.
நவீன டிஜிட்டல் யுகத்தில் பலருக்கும் இந்த செயலிகள்தான் உயிர் மூச்சாக இருக்கின்றன. இதன் மீது கை வைத்தால், மக்களின் எண்ணவோட்டம் என்னவாக இருக்கும் என்பதை இந்தப் போராட்டம் மற்ற உலக நாடுகளுக்கும் உணர்த்தி இருக்கிறது.