ஜப்பான் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உருவான ஹகிபிஸ் என்னும் புயல் தலைநகர் டோக்கியோவை கடுமையாக தாக்கி கரையை கடந்தது. முன்னதாக இந்த புயல் வருவதற்கு முன்பு வானம் பிங்க் நிறத்தில் மாறியது.
கடந்த 12ம் தேதி இரவு ஹகோனே நகரில் மட்டும் 24 மணி நேரத்தில் மட்டும் 93 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இது 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு படுமோசமாக புயல் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 225 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியுள்ளது. இதில் ஏராளமான வீடுகள் காணாமல் போனது. மேலும், புயலின் காரணமாக ஹகோனே, சிபா போன்ற கரையோரப் பகுதியில் பலத்த மழை பெய்தது.
இந்த மழைக்காரணமாக 14-க்கும் மேற்பட்ட நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கின் போது தண்ணீர் ஊருக்குள் புகுந்து இரண்டாவது மாடிவரை நீர் பெருக்கெடுத்து ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஜப்பான் முழுவதும் சர்வதேச, உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, சிபா பிராந்தியத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது.
இதனால் அச்சமடைந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். டோக்கியோ, மிய், ஷிசுவோகா, குன்மா, சிபா உள்பட மாகாணங்களில் வசிக்கும் சுமார் 42 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புல்லட் ரயில் நிலையங்கள், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதனால் ரயில் மற்றும் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுவரை கனமழை, புயலுக்கு 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே புயல் காரணமாக கனமழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதேபோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நாட்டு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.