ஹாங்காங் அரசு காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பிறகு, 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஹாங்காங் மக்களுக்கென தனி பண மதிப்பு, சட்டம், நிர்வாகம் என இருந்து வருகிறது. ஹாங்காங் சீன அரசுடன் சுமுகமான உறவில் தான் இருந்து வருகிறது.
இந்நிலையில், கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவிற்கு நாடு கடத்தும் மசோதாவை கொண்டுவர ஹாங்காங் அரசு முடிவு செய்தது. இதற்கு ஹாங்காங் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து மக்கள் வீதிகளில் இறங்கி கடந்த மூன்று மாதங்களாக போராடி வந்தனர்.
மக்கள் போராட்டத்திற்குப் பிறகு மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் நிறுத்தி வைத்தது. இருப்பினும் மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெறவேண்டும் என போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
அதனை அடுத்து மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டத் திருத்த மசோதாவை வாபஸ் பெறுவதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆனாலும், போராட்டக்காரர்கள் சீனா தலையிடுவதை நிறுத்தவேண்டும், சுகந்திரமாக தேர்தல், போராட்டத்தின் போது சிறையில் உள்ள போராட்டக்காரர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என மற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கினார்கள். இந்தப் போராட்டத்திற்கு ஹாங்காங் அரசு செவிமடுக்காத நிலையில் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கிவருகின்றனர்.
இந்த வன்முறை சம்பவங்களின்போது போராட்டக்காரர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்துக்கொண்டு முகத்தில் முகமூடி அணிந்துகொண்டு போராடி வருகின்றனர். இதுபோல முகமூடி அணிந்து போராடுவதற்கு தடைவிதிக்கும் அவசர சட்டம் ஒன்றை கேரி லாம் நேற்று அமல்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் நேற்று இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவந்த கடைகளை அடித்து நெறுக்கி தீயிட்டுக் கொளுத்தினார்கள். மேலும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அரசு வாகனத்தில் வந்த போலிஸார் ஒருவரை வழிமறித்து தாக்குதல் நடத்தி, அவரை தீயிட்டுக் கொளுத்த முற்பட்டனர்.
உடனே, தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தரையில் சுட்டார். அதனால் போராட்டக்காரர்கள் தாக்குதலை நிறுத்தியதால், தீயிட்டுக் கொளுத்த முயன்றதிலிருந்து தப்பித்தார். இந்தச் சம்பவம் ஹாங்காங் அரசை மேலும் கோபப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.