அமெரிக்காவில் சார்ஜிடா கவினெட் என்ற பிரபலக் கல்லூரி ஒன்று உள்ளது. அக்கல்லூரியில் ரமடா சிசோகோ சிஸ் என்ற பெண் உயிரியல் பேராசிரயராக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல தனது கல்லூரிக்குச் சென்று பாடம் நடத்தி வந்துள்ளார்.
ஆனால், தனது வகுப்பில் சிறந்த மாணவி ஒருவர் அடிக்கடி வகுப்பிற்கு வராமல் இருப்பதை கவனிக்கிறார் ரமடா. பின்னர், கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மாணவிக்கு தொடர்புக் கொண்டு பேராசிரியர் ரமடா பேசினார். அப்போது அந்த மாணவிக்கு குழந்தை ஒன்று இருப்பதும், குழந்தையை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாததால், வகுப்புக்கு சரியாக வர முடியாமல் தவித்து வந்தது தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் படிப்பில் கவனம் செலுத்தமுடியவில்லை என்ற வருத்தமும் உள்ளதாக மாணவி தெரிவித்துள்ளார். இதனையடுத்து பேராசிரியர் ரமடா நாளை ஒருமுக்கிய வகுப்பு உள்ளது, உனது குழந்தையையும் அழைத்து கல்லூரிக்கு வாருங்கள் என கூறியுள்ளார்.
பின்னர் கல்லூரி நிர்வாகத்தில் சிறப்பு அனுமதி பெற்று கைக்குழந்தையுடன் மாணவி வகுப்புக்கு வர பேராசிரியர் அனுமதி பெற்றுத் தந்துள்ளார். பேராசிரியை அனுமதி அளித்த பிறகு கைக்குழந்தையுடன் வகுப்பிற்குள் மாணவி வந்தார்.
ஆனாலும், குழந்தை மாணவியின் கையில் இருந்தால் அவரலா பாடத்தை கவனிக்க முடியாது என்பதை உணர்ந்த பேராசிரியை ரமடா, மாணவியின் அனுமதியோடு குழந்தையை வாங்கி அவர் கொண்டு வந்த ’லேப் கோட்’ கொண்டு, குழந்தையை தன் முதுகில் கட்டிக்கொண்டு பாடம் எடுத்துள்ளார்.
குழந்தையை கிட்டதக்க 3 மணி நேரம் முதுகில் தாங்கிக்கொண்டு பேராசிரியை ரமடா பாடம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. குழந்தையை முதுகில் கட்டிக் கொண்டு பாடம் எடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆசிரியையின் பட வலைதளங்களில் பகிரப்பட்டது.
மேலும் அந்த புகைப்படத்தை ரமடாவின் மகள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், “3 மணி நேரமாக என் அம்மா, அவரது மாணவியின் குழந்தையை முதுகில் தாங்கிக்கொண்டு பாடம் எடுத்துள்ளார். என் அம்மா தான் எனக்கு எப்போதும் முன் உதாராணம். அவர் கிடைத்தது எனது அதிர்ஷ்டம்” என பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பேராசிரியர் ரமடா கூறுகையில், “என் மாணவிகள் மீது நான் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் நம்பிக்கை பெற உதவுவதே ஆசிரியர்களின் கடமை. அந்த மாணவி சிறந்த ஆற்றல் உடையவர். என் மாணவர்கள் மனிநேயம் மிக்கவர்களாக இருக்கவேண்டும் என்பதைதான் நான் முதலில் கற்றுத்தருவேன்” என்றார்.
பாடம் எடுத்தால் மட்டும் போதும் என்றில்லாமல், மாணவியின் பிரச்னையை அறிந்து அதற்கு தீர்வு தந்து, பாரத்தையும் சுமந்து, ஆசிரியர் பணி ஒரு உன்னத பணி என உலகிற்கே எடுத்துக் காட்டியிருக்கிறார் பேராசிரியர் ரமடா. உலகம் முழுவதும் ரமடாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.