மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நயீப் புக்கேலே வெற்றி பெற்றார். இதற்கு முன் அந்நாட்டின் மேயராக நயீப் புக்கேலே பதவி வகித்து வந்தார்.
இளம் வயதான நயீப், தன்னை எப்போது சமூக வலைதளங்களில் முன்னிலைபடுத்திக்கொள்பவர். அதிபர் தேர்தலில் இவர் வெற்றி பெற பெரிதும் உதவியாக சமூக வலைதளங்கள் இருந்தது எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் உலக நாடுகளில் உள்ள முக்கிய தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். இதில் எல் சல்வாடார் நாட்டின் அதிபர் நயீப் புக்கேலேவும் கலந்துகொண்டார்.
அவர் அதிபரான பிறகு முதன் முதலில் ஐ.நா கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அவர் ஐ.நா கூட்டத்தின் மேடையில் ஏறி பேசும் போது, உலக தலைவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் கூறினார். பின்னர் உலகத் தலைவர்கள் சில நொடிகள் பொருத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் கூறியதையடுத்து உலக நாட்டு தலைவர்கள் சம்மதிக்க, தனது சட்டைப்பையில் வைத்திருந்த மொபைல் ஃபோனை எடுத்து, ஐ.நா மேடையில் நிற்பதுபோல சிரித்த முகத்துடன் செல்பி எடுத்தார். அப்போது அங்கு கூடியிருந்த தலைவர்கள் புன்னகைத்தனர்.
பின்னர் புன்னகை முகத்துடன் பேசிய அவர், “நான் இந்த அவையில் பேசுவதைக் காட்டிலும், என் இஸ்ன்டாகிராமில் நான் பகிரும் புகைப்படம் தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் தான் செல்ஃபி எடுத்தேன். அனுமதி கொடுத்த உலக தலைவர்களுக்கு நன்றி.
இதுபோல தலைவர்கள் கலந்துக்கொண்டு பேசும் கூட்டங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த வேண்டும்” என கேரிக்கை வைத்தார். அதனையடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் ஐ.நா செல்ஃபி என அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
பலரும் அந்த புகைப்படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், அதற்குமாறாக, ஒரு நாட்டின் அதிபரைக் கூட செல்ஃபி மோகம் விட்டுவைக்கவில்லை என விமர்சித்து வருகின்றனர்.