பருவநிலை மாறுபாடு விஷயத்தில் அமெரிக்காவின் அலட்சிய நடவடிக்கையை சகித்துக்கொள்ளமுடியாத இளம் சூழலியல் போராளி கிரேட்டா தன்பெர்க், ஐ.நாவின் பருவநிலை கூட்டத்திற்கு வருகை தந்த அதிபர் டொனால்ட் ட்ரம்பினை தன் கூர் கண்களால் முறைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோ பதிவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வந்து கொண்டிருக்கிறார். அதற்காக தன்பெர்க் மற்றும் அவருடன் வந்தவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். முதலில் உலகத் தலைவர்கள் வருகிறார்கள் என ஆர்வத்தில் எட்டிப் பார்த்த தன்பெர்க், ட்ரம்ப் என்றதும் அவருக்கு பின்புறம் நின்றுகொண்டு எரிச்சலுடன் முறைக்கிறார். கடுமையான கோபமாகத் தோன்றும் கிரேட்டாவின் கண்களை அங்குள்ள வீடியோ கேமராக்கள் பதிவு செய்துள்ளன.
இந்த சம்பவத்திற்கு முன்னதாக கிரேட்டா ஐ.நா நாடுகளின் காலநிலை மாற்றம் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உலகத் தலைவர்களை கடுமையாக சாடினார். மேலும் அந்தக் கூட்டத்தில், “நாம் அனைவரும் பேரழிவின் விளிம்பில் இருக்கின்றோம்.
ஆனால் அதனை உணராமல் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை பற்றி இங்கு பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் தொடர்ந்து இதில் இருந்து விலகிச் செல்கிறீர்கள்.. உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?”என ஆக்ரோஷமாகப் பேசினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முன்னதாக, உலகெங்கிலும் உள்ள ஐந்து முக்கிய பொருளாதார நகரங்கள் தங்களது பருவநிலை நெருக்கடியைத் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்காததன் மூலம் மனித உரிமைகளை மீறியுள்ளதாக குற்றம் சாட்டி கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 குழந்தைகள் திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில் புகார் அளித்தனர்.
மேலும் அவர்கள் தாக்கல் செய்த புகார் மனுவில் ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், அர்ஜென்டினா மற்றும் துருக்கி ஆகிய ஐந்து நாடுகளின் பெயர்கள் உள்ளன. அந்த நாடுகள் அனைத்தும் பருவநிலை மாற்றம் குறித்த உடன்படிக்கையின் கீழ் தங்கள் கடமைகளை நிலைநிறுத்தத் தவறிவிட்டன என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் உலகத் தலைவர்கள் காட்டியுள்ள அவசரமின்மை குறித்து தங்கள் அப்பட்டமான விரக்தியை தன்பெர்க் உள்ளிட்ட குழந்தைகள் வெளிப்படுத்தினர்.
அதற்குக் காரணம், வளிமண்டலத்தில் அதிக வெப்பமயமாதலைத் தூண்டும் கார்பன் டை ஆக்சைடை கட்டுப்படுத்த போடப்பட்ட ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடவில்லை. டிரம்ப் காலநிலை மாற்றம் குறித்து தனது நிலைபாட்டை மோசமான பார்வையில் வைத்திருந்தார்.
உலக நாடுகள் பருவநிலை மாற்றம் பெரும் ஆபத்து என்று கூறியபோதும், டிரம்ப் இது சீனாவால் பரப்பப்படும் பொய்ச் செய்தி எனக் குற்றம்சாட்டினார். மேலும், காலநிலை மாற்றம் குறித்து தனது கருத்துகளை கேலியுடன் பதிவு செய்துள்ளார்.
முன்பிருந்த ஆட்சியாளர்கள் எடுத்த நடவடிக்கைகளைக் கூட தற்போது ட்ரம்ப் முடக்கி வைத்துள்ளார். அதுமட்டுமல்லாது, புதிதாக கனிம வளங்கள் எடுக்கவும், புதிய எண்னெய் மற்றும் எரிவாயு எடுக்கவும் அனுமதி அளித்துவருகிறார். சூழலியலுக்கு எதிரான அவரது தொடர்ச்சியான நடவடிக்கைகளால் தான் தன்பெர்க் அவரைப் பார்த்து முறைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.