சவூதி அரேபியாவின் அப்கைக் நகரில் அமைந்துள்ள சவுதி அரசின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றில் ஆளில்லா விமானத் தாக்குதல் நடைபெற்றது.
ஏமன் அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். ஏமன் நாட்டிற்கு ஆதரவாக சவூதி அரேபியா செயல்பட்டு வருவதால் சவூதி மீது ஏறக்குறைய 100 தாக்குதல்கள் இதுவரை நடத்தபட்டுள்ளன.
இதில் 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் தீப்பற்றி எரிந்ததாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. இதனால் உலகளவில் நாள் ஒன்றுக்கு 5 விழுக்காடு கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
தாக்குதலுக்குப் பிறகு அரம்கோ எண்ணெய் நிறுவனத்தில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் சவூதி அரேபியாவின் மொத்த உற்பத்தியில் பாதி அளவு தயாரிப்பு பாதிக்கப்படும் என சவுதி இளவரசர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலால் இந்தியா பெரிய அளவில் பாதிப்பைச் சந்திக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்துவந்த இந்தியா, அமெரிக்காவின் வற்புறுத்தலால், தனது எண்ணெய்த் தேவையை பூர்த்தி செய்ய சவுதி அரேபியாவை நாடியது. இந்த தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை 20 சதவிகிதம் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்தியாவைப் பொறுத்தவரை பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
சவுதி எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட தாக்குதலால் எரிபொருள் விநியோக பாதிப்பு இருக்காது என நம்புகிறோம். சவுதியில் எண்ணெய் ஆலைகளில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலை அடுத்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.