மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் அதிபர் போர்ஃபிரி ஒ லுபோ. இவரது ஆட்சியின் போது சர்வதேச அளவில் ஏழைக் குழந்தைகளுக்காக நிதி திரட்டும் முயற்சியில் இவரது மனைவி ரோசா எலினா பொனிலா தீவிரமாக இறங்கினார். அதன்படி நான்கு ஆண்டுகளில் சர்வதேச அளவில் நன்கொடை பெற்றார்.
போர்ஃபிரி ஒ லுபோ பதவி விலகிய பின்னர் அந்த நன்கொடையில் இருந்து எந்தச் செலவும் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஏழைக் குழந்தைகளுக்கு காலணி வழங்குவதற்கான பட்ஜெட் அமைத்ததிலும் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து சுமார் 7 லட்சத்து 79 ஆயிரம் டாலர் மோசடி செய்ததாக புகார் பதியப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் மக்கள் பணத்தில் மோசடி செய்த வழக்கு விசாரணையில் பொனிலா கைதானார்.
இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், “முன்னாள் அதிபரின் மனைவி, சர்வதேச அளவில் நன்கொடை பெற்று நகைகள் வாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி மருத்துவச் செலவு மற்றும் தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுக்காக பயன்படுத்திக் கொண்டார்” என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிமன்றம் 52 வயதான பொனிலா குற்றவாளி என தீர்ப்பளித்து 58 ஆண்டுகள் சிறை தண்டனை வித்தித்துள்ளது. அவருக்கு உதவியாக இருந்த உதவியாளர் சால் எஸ்கோபாருக்கும் 48 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை ஹோண்டுராஸ் நாட்டு மக்கள் வரவேற்றுள்ளனர். முன்னதாக போர்ஃபிரி ஒ லுபோவின் முதல் மகன் ஃபாபியோ அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தியதற்காக 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.