அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான டோரியன் என்ற சூறாவளி பஹாமாஸை திங்கட்கிழமையன்று கடுமையாக தாக்கியது. இந்த சூறாவளியால் பலத்த காற்று வீசியதுடன் அங்கு கனமழை கொட்டித்தீர்த்தது. 220 கி.மீ வேகத்தில் வீசிய காற்றினால் பஹாமாஸ் நாடு முழுவதுமாக உருக்குலைந்தது.
அதுமட்டுமல்லாது, கடலில் சுமார் 20 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்தன. இதுவரை இல்லாத அளவுக்கான சக்தி வாய்ந்த சூறாவளியாக இந்த டோரியன் சூறாவளி இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு முழுவதும் வடக்கு கரோலினா பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இந்தப் புயல் காரணமாக ஜார்ஜியா, தென்கிழக்கு விர்ஜினியா ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அதனால் கடற்கரை பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு ஏற்கனவே சென்றுவிட்டதால், சேத பாதிப்பு குறைவாக இருந்தது.
இந்த சூறாவளியால் தற்போது வரை 43 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றன. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கிட்டதட்ட 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமானதாக கூறப்படுகிறது. இந்த சூறாவளி தற்போது அமெரிக்காவை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த சூறாவளி குறித்து நாசா தொடர்ச்சியாக பல தகவல்களை வெளியிட்டு வருகிறது. அதனையடுத்து தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புயலின் தீவிரம் குறையாமல் வலுப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.