மெக்சிகோ நாட்டின் தலாக்ஸ்கலா என்ற கிராமத்தில் உள்ள முதுகலைப் பள்ளியில் மாணவர்கள் கடும் இன்னல்களை தினந்தோறும் சந்தித்து வருவதாக மாணவர்களின் பெற்றோர் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மீண்டும் மாணவர்களை அவமானப்படுத்தும் விதமாக பள்ளி நிர்வாகம் நடந்து கொண்டதாக பெற்றோர், உயர் கல்வி அதிகாரியிடம் குற்றச்சாட்டியுள்ளனர். கடந்த வாரம் அந்த பள்ளியில் முதுகலை மாணவர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வை எழுதச் சென்ற மாணவர்களுக்கு தேர்வு கண்காணிப்பு ஆசிரியர் தேர்வுத் தாளுடன் அட்டைப்பெட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார். மாணவர்கள் தேர்வின்போது பிற மாணவர்களை பார்த்து எழுதுவதாகவும், மேலும் சில ஒழுங்கீன செயலில் ஈடுபடுவதாகவும் கூறி இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்பட்டது.
மாணவர்கள் தலையில் அட்டை பெட்டியை கவிழ்த்தபடி, அந்த அட்டைப்பெட்டியில் கண்கள் தெரியும் அளவிற்கு மட்டும் போடப்பட்டுள்ள ஓட்டை வழியாக தேர்வுத்தாளை பார்த்து எழுதியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் இதனை பார்த்த மாணவர்களின் பெற்றொர் மாநில கல்விதுறை அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரில், “மாணவர்களின் அடிப்படை உரிமையை மீறிய செயலை பள்ளி நிர்வாகம் செய்துள்ளது. இது மாணவர்கள் மீது நம்பிக்கையில்லாமல் அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. இதுபோல தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் மனநிலை கடும் பாதிப்புகளைச் சந்திக்கும்.
மாணவர்கள் தேர்வில் காப்பி அடிக்காமல் தடுக்கவேண்டும் என்றால், தேர்வுக்கு புரியும்படி பாடம் நடத்தியிருக்கவேண்டும். அதிகமான நேரம் படிப்பதற்கு அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். இதுபோல எந்த செயலையும் செய்யாமல் மாணவர்களை ஏதோ குற்றவாளிகள் போல நடத்துவது சரியல்ல. அந்த தேர்வை கண்காணித்த ஆசிரியரை தகுதி நீக்கம் செய்யவேண்டும்” என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதைப்போன்று பாங்காக்கில் மாணவர்கள் தேர்வில் காப்பியடிப்பதைத் தடுக்க, இருபுறமும் வெள்ளைத்தாளை வைத்து தேர்வு எழுத வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.