அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான டோரியன் என்ற சூறாவளி பஹாமாஸை திங்கட்கிழமை அன்று கடுமையாக தாக்கியது. இந்த சூறாவளியால் பலத்த காற்று வீசியதுடன் அங்கு கனமழை கொட்டித்தீர்த்தது. 220 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் பஹாமாஸ் நாடு முழுவதுமாக உருக்குலைந்தது.
அதுமட்டுமல்லாது, கடலில் சுமார் 20 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்தன. இதுவரை இல்லாத அளவுக்கான சக்திவாய்ந்த சூறாவளியாக இந்த டோரியன் சூறாவளி இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த சூறாவளியால் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றன. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கிட்டதட்ட 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமானதாக கூறுப்படுகிறது. இந்த சூறாவளி தற்போது அமெரிக்காவை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த சூறாவளி குறித்து நாசா தொடர்ச்சியாக பல தகவல்களை வெளியிட்டு வருகிறது. அதில் நேற்றைய தினம் நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் சூறாவளியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பூமியின் மேற்பரப்பில் இருந்து பிரம்மாண்டமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறது.
எதிர்பார்த்ததை விட இதன் வலு அதிகமாக இருக்கும் என்பதால், ஃபிளோரிடா, ஜார்ஜியா மற்றும் வடகரோலினா மாகாணங்களில் அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சூறாவளியை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், இதுவரை 5ம் நிலை சூறாவளியை அமெரிக்கா எதிர்கொண்டது இல்லை எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.