ஹாங்காங் அரசு காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பிறகு, 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஹாங்காங் மக்களுக்கென தனி பண மதிப்பு, சட்டம், நிர்வாகம் என இருந்து வருகிறது. ஹாங்காங் சீன அரசுடன் சுமுகமான உறவில் தான் இருந்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்தம் செய்வதற்கு முடிவு செய்து, அதற்கான மசோதாவையும் சட்டசபையில் கொண்டு வந்தது. ஆனால் இது ஹாங்காங் மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மக்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் போராட்டத்திற்குப் பிறகு ஹாங்காங் நிர்வாகம் மசோதாவை நிறுத்தி வைத்தது. ஆனாலும் மசோதாவை முழுமையாகத் திரும்பப்பெறவில்லை. மேலும், ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் கேரி லாம் பதவி விலகவேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர்.
கடந்த மாதம் விமான நிலையத்துக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போலிஸார் தாக்குதல் நடத்தி அங்கிருந்து விரட்டினர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்து கலவரம் உருவானது.
அதன் பின்பு தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டத்தில் அரசாங்கம் அமைத்துள்ள அதிநவீன ‘ஸ்மார்ட் கண்காணிப்பு விளக்கு’ கம்பங்களை நீக்க வழியிறுத்தி அந்த மின் கம்பங்களை ரம்பம் கொண்டு அறுத்து சாய்த்தனர். பின்னர் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய போராட்டக்குழுவினரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் ஆத்திரமடந்த போராட்டக்காரர்கள் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைகளை தடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் விமான நிலையத்திற்கு செல்லும் ரயில்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. மேலும் சாலைகள் தடுக்கப்பட்டன. இதனால் விமான நிலையத்திற்குப் பயணிகள் நடந்து செல்ல வேண்டியிருந்தது. பெரும்பாலான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் விமான நிலைய முனையக் கட்டடத்திற்குள் செல்ல முயன்றனர். ஆனால், கலவர தடுப்பு காவல் பிரிவினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலிஸார் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி கலைத்தனர்.
மேலும், போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பகுதியினர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனத்தின் மூலம் நீல மை அடித்தனர். இந்த நீல நிற மை அடித்து கூட்டம் கலைக்கப்பட்டவுடன் போராட்டக்காரர்களை அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையை போலிஸார் மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. சீனாவிற்கு பெரும்பாலான உலக நாடுகள் ஆதரவு அளித்தாலும் சமூக ஆர்வலர்கள், ஜனநாயன அமைப்பினர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.